அவதானம்! வாகனங்களை வாடகைக்கு பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த பெண் உட்பட 6 பேர் கைது
வாகனங்களை வாடகைக்குப் பெற்று அந்த வாகனங்களுக்கு அசலை ஒத்த போலி ஆவணங்களை தயாரித்து பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி குறைந்த விலையில் விற்பனை செய்து வந்த பெண் ஒருவரை தலைவியாகக் கொண்ட 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோசடி தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியங்க டி சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழு மேற்கொண்ட நடவடிக்கையினூடாக இவர்களை கைது செய்ய முடிந்ததாகவும் மோசடிக்கு பயன்படுத்திய ஆவணங்கள், விசேடமாக தயாரிக்கப்பட்ட இறப்பர் முத்திரைகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததவாது,
வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்படும் வாகனங்கள் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்படும் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்திற்கு கடந்த காலங்களில் சென்றுள்ள பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு வாகனமொன்றினை பெற்று பயன்படுத்தியுள்ளார்.
அதற்குரிய வாடகை தொகையினையும் அவர் வழங்கியுள்ளார். அதனையடுத்து சில நாட்களின் பின்னர் பிறிதொரு நபர் ஒருவருடன் குறித்த நிறுவனத்திற்கு சென்றுள்ள அந்தப் பெண், தன்னுடன் வந்த ஆடவருக்கு வாகனமொன்றினை மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
301 வகையிலான வாகனங்களையே இந்த குழு இலக்கு வைத்துள்ளது. இதனையடுத்து குறித்த வாகனத்திற்கு போலி ஆவணங்களை தயாரித்துள்ள அந்த குழு அதனை சந்தை விலையிலும் குறைத்து 14 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளது. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர் என்றார்.
இது தொடர்பில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த டி சில்வா தெரிவிக்கையில்,
நுகேகொட பகுதியில் உள்ள வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றிலேயே இந்த பெண் உள்ளிட்ட குழு ஒன்று தனது கை வரிசையை காட்டியுள்ளது.
வாகனங்களுக்கான போலி ஆவணங்களை தயாரிக்க மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தின் அசல் விண்ணப்பங்களை திருட்டுத்தனமாக எடுத்தே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கைள அங்கு சேவை செய்யும் சாரதி ஒருவர் விண்ணப்பம் ஒன்றுக்காக 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளார். நாகுல கமகே கருணாசேன என்ற குறித்த சாரதியையும் நாம் கைது செய்துள்ளோம். இவர் மோட்டார்வாகன பதிவு திணைக்களத்தின் முன்னாள் கணக்காளரின் சாரதியாக பணியாற்றியுள்ளார். இதனை விட ஹட்டன் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த குழுவின் தலைவியையும் நாம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம்.
அவர் தமிழ், முஸ்லிம், சிங்கள பெயர்களில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஸ்ரீதேவி, நஜ்லா அகிலா, ரிஹானா ஆகிய பெயர்களிலேயே 33 வயதான அவர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். கோட்டை பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றை அவர் வழங்கியுள்ளபோதும் அது போலியானது. மூன்று கணவன்மாரும் இவருக்கு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அறுவரும் கொழும்பு நீதிவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்ய முனையும் ஒருவர் மிக அவதானமாக இருக்க வேண்டும். இதுவரை அவ்வாறான போலி நடவடிக்கை ஒன்றுக்குள் எவரேனும் சிக்குண்டு இருப்பின் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 011 - 2583512 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிட முடியும் என்றார்.
அவதானம்! வாகனங்களை வாடகைக்கு பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த பெண் உட்பட 6 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 03, 2014
Rating:

No comments:
Post a Comment