'மன்னார் மனித புதைகுழி, பழைய மயானம்' - ஏ.ஏ.வி.விஜேரத்ன
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியென தோண்டப்பட்ட பகுதி பழைய மயானமொன்றாகும் என தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்தது.
மேற்படி புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த விதம், சடலங்கள் மண்ணினால் மூடப்பட்டிருந்த முறை மற்றும் மனித எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையை அடுத்தே மேற்படி மனித புதைகுழியானது பழைய மயானம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் இதனையடுத்து புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவு அதிகாரி ஏ.ஏ.வி.விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த சடலங்கள் முறைப்படியே புதைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சடலத்துக்கு வௌ;வேறு குழிகள் தோண்டப்பட்டே புதைக்கப்பட்டுள்ளன என்பதற்கு சாட்சிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
இந்த சடலங்கள் வெவ்வேறு காலப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இவை 50 - 60 வருடங்கள் பழைமையானவை. சில மனித எலும்புக்கூடுகள் 100 வருடங்கள் பழைமையானவை என்றும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்த சடலங்கள் புதைக்கப்பட்ட காலங்களில் சவப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் 1936 மற்றும் 1937 ஆண்டுக் காலப்பகுதியில் உலர் வலயப் பகுதிகளில் பரவிய மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் சடலங்களே இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த மனித புதைகுழி தொடர்பான அறிக்கையை தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அகழ்வுப் பிரிவு அதிகாரி ஏ.ஏ.வி.விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் நீரிணைப்பு வேலைத்திட்டத்திற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கு மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளமை தெரியவந்தது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் கடந்த 5ஆம் திகதிவரை 33 தடவைகள் குறித்த மனித புதைகுழியை தோண்டும் பணியை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுவந்தனர்.
இதன்போது, சுமார் 84 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில், மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய இவை பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'மன்னார் மனித புதைகுழி, பழைய மயானம்' - ஏ.ஏ.வி.விஜேரத்ன
Reviewed by Admin
on
March 08, 2014
Rating:
Reviewed by Admin
on
March 08, 2014
Rating:


No comments:
Post a Comment