அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களுக்கும் சிங்கள தீவிரவாதிகளுக்கும் ஏமாற்றம் -மனோ



ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு, தமிழ் மக்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஒருசேர ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு துணைக்கருவியே தவிர அது மாத்திரம் எமக்கு நிம்மதியையும், நியாயத்தையும் கொண்டுவந்து தந்து விடாது என்றும், உள்நாட்டிலே இந்த அரசுக்கு எதிரான ஜனநாயக போராட்டம் மற்றும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகள் மூலமாகவே தமிழ் மக்கள் நியாய இலக்கை அடைய முடியும் என நாம் எப்போதும் சொல்லி வந்தது இன்று சரியாகியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

இலங்கை வந்து செல்லும் அமெரிக்க அரச பிரமுகர்கள் வரிசையாக வடக்குக்கு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், துன்புற்று வாழும் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை என இன்று தெரிய வந்துள்ளது. சர்வதேச விசாரணை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போதும், இன்று அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம். 

அதேபோல் அமெரிக்க தீர்மானம் மூலம் "இதோ, அதோ வருகிறது, மின்சாரக்கதிரை " என கோஷமிட தயாராக இருந்தவர்களுக்கும் இந்த தீர்மான வரைபு ஏமாற்றத்தை தந்துள்ளது. இவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால், எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆகும். 

கைது செய்யப்பட்டு, சரணடைந்து, கடத்தப்பட்டு சிறைகூடங்களில் வாடும் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அனைத்து சிறைக்கூடங்களிலும், உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய கைதிகளுக்கு விசேட நீதிமன்றங்களை அமைப்போம் என அமைச்சர்கள் நிமல் சிறிபாலவும், ரவுப் ஹக்கீமும் உத்தரவாதம் வழங்கினார்கள். இன்று வரிசையாக கைதிகள் இறந்து போவதை தவிர எதுவும் மாற்றம் பெறவில்லை. 

சமீபத்தில் என்னை சந்தித்த ஒருகாலத்தில் மலையகத்தில் இருந்து சென்று வன்னியில் குடியேறி வாழும் ஒரு தமிழ் தாய் இப்படி சொன்னார். " ஐயா, என் கணவனை கடத்தி போனார்கள். மகனையும் இராணுவம் பிடித்துகொண்டு போனது. இப்போது என் பிரச்சனை என் கணவரையும், மகனையும் தேடுவது அல்ல. என் பருவ வயது மகளையும், என்னையும் பாதுகாத்து கொள்வதே என் போராட்டம்". இது போர் முடிந்த வலயத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் நிர்க்கதியாயுள்ள தமிழ் மகளிரது கண்ணீர் படலத்தின் ஒரு சிறு துளி. 

வடக்கு மாகாணசபை எப்படி நடக்கிறது என மன்மோகன் சிங், நமது ஜனாதிபதியை கேட்டாராம் என ஊடக செய்தி கூறுகிறது. அதற்கான பதிலை வழங்கக்கூடிய பொருத்தமான நபர் விக்கினேஸ்வரன் ஆகும். அவர் அதை ஏற்கனவே கூறிவிட்டார். வடமாகாணசபை என்ற வெற்று பாத்திரத்தையே தொடர்ந்து தூக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என அரசு நினைப்பதை பட்டவர்த்தனமாக விக்கினேஸ்வரன் கூறிவிட்டார். 

இவற்றையெல்லாம் அமெரிக்க வரைபு கணக்கில் எடுக்கவில்லை. சர்வதேச சமூகம் அல்லது அமெரிக்கா அனைத்து தீர்வுகளையும் அள்ளி வழங்கும் என, உள்நாட்டு ஜனநாயக போராட்டங்களை ஒத்திவைக்க கூடாது. சர்வதேச சமூகம் அவசியம்தான். 

ஆனால், அது துணைபாத்திரம்தான் வகிக்க முடியும். நாம் வாழும் பூமியில் நாம் அரசியல்ரீதியாக பலமாக எம்மை நிலைநிறுத்திக் கொண்டு ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், தென்னிலங்கை அரசியல் நகர்வுகளுடன் ஒன்றிணைவோம் என்றும் நாம் சொல்லி வந்தவை சரியாக அமைந்து விட்டன. 
தமிழர்களுக்கும் சிங்கள தீவிரவாதிகளுக்கும் ஏமாற்றம் -மனோ Reviewed by Author on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.