அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு அத்திவாரம் இடப்படும் : விக்கினேஸ்வரன்

நல்லதொரு முடிவை என் இனிய தமிழ்ப் பேசும் சகோதர, சகோதரிகள் தேர்தலில் எடுத்துள்ளார்கள். இன்று நாங்கள் மனமுவந்து வாக்களித்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பெரும்பான்மையினரும் சிறுபான்மை யினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே மைத்திரிபால சிறிசேன ஆவார்.

அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான அத்திவாரம் நாட்டப்படும் என்றும் நம்புகின்றேன். அவருக்கு இது சார்பாக எங்கள் மக்களின் சகல ஒத்துழைப்புக்களும் உதவிகளும் அளிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

ஒரு மண்ணின் மைந்தனான அவர் சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நாம் நம்பலாம். பல கடினமான கடப்பாடுகள் அவரைச் சார்ந்துள்ளன. அண்மைய காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண, மலையக மக்களின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டிய கடப்பாடு, பெரும்பான்மை மதவெறியின் தாக்கத்தால் மருண்டு போயிருந்த முஸ்லிம் மக்களை அணைத்தெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, போர்முடிந்தும் அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தினாலும் அவர்களின் உள்ளீடல்களாலும் அல்லலுறும் எமது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை நிலைகளையும் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு என்று பல கடமைகள் அவரைச் சார்ந்து நிற்கின்றன. அவர் அவை சம்பந்தமாகப் போதிய கவனம் செலுத்துவார் என்பதில் என் மனதில் சந்தேகம் இல்லை.

ஜனநாயகத்தை நிலைக்கச் செய்வதானால் பொறுமை, நம்பிக்கை, காருண்யமனோநிலை யாவும் அவசியம். அவற்றை நாம் கடைப்பிடித்தே ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்டுள்ளோம். வருங்காலம் புதியதொரு சகாப்தத்தை உண்டுபண்ணட்டும்! எமது தேவைகளை அறிந்து எமது மனோநிலைகளைப் புரிந்து நாட்டை ஆள்வோர் செயற்படட்டும்!

நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். பலவித அச்சுறுத்தல்கள், அல்லல்கள், அவலங்கள் மத்தியிலும் நாம் எமது கடமைகளைச் செய்து விட்டோம். புதிய தலைமைத்துவம் எம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் எல்லோரும் மகிழ்வுடனும் சுதந்திரத்துடனும் போதிய உரிமைகளுடனும் தனித்துவத்துடனும் ஐக்கிய இலங்கையினுள் வாழ இறைவன் அருள் புரிவானாக.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு அத்திவாரம் இடப்படும் : விக்கினேஸ்வரன் Reviewed by NEWMANNAR on January 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.