எமது சமூகத்தை அழிக்க கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளே தற்போதைய சம்பவங்கள்!- சி.சிறீதரன் பா.உ.
தற்பொழுது எமது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொடுரமானதும் அருவருக்கத்தக்கதுமான சமூக விரோத சம்பவங்கள் கடந்த காலத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போரின் பின்னான கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளாகவே காணப்படுகின்றது என பா.உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
எமது மக்களின் மனோநிலை பண்பாடு என்பன சிதைக்கப்பட்டு இன அடையாளங்கள் அற்ற நிலையில் வாழ விடுவதே ஆக்கிரமிப்பாளனின் நோக்கமாக இருக்கின்றது என கருத்தாடல் ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தேசத்தையோ அல்லது ஒரு இனத்தையோ வரையறுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை மூலம் அழித்து விடமுடியாது. ஆதலால், ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், பல்வேறு நகர்வுகளை கட்டம் கட்டமாக முன்னெடுப்பான். இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டமைப்பு சார் அடிப்படையில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு.
நேரடியான நகர்வுகள் இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தை உடனடியாக உலுப்பும். மறைமுகமானதும் கட்டமைக்கப்பட்டதுமான நடவடிக்கைகள் நீண்டகாலத்தில் குறித்த தேசத்தை, இனத்தை நிர்மூலமாக்கும். இன அழிப்பையும் தொடர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது
தனித்த நேரடியான ஆயுதப் போர் மட்டுமல்ல. மாறாக, ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பை, அதன் பண்பாட்டை, அடையாளத்தை மற்றும் பொருண்மியத்தை பல்வேறு வழிவகைகளில் பலவீனப்படுத்தி இறுதியில் பேரழிவை உண்டுபண்ணுவதே இனஅழிப்பின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படை.
இத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமிழின அழிப்பும் பன்னெடுங்காலமாக சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததென கூறப்படும் காலம் முதல் கட்டமைப்புசார் இனஅழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த சிறீலங்கா அரசு, அதற்கு எதிராக தோன்றிய உரிமைப் போரை, விடுதலைக்கான புரட்சியை பயங்கரவாதமாக முத்திரை குத்துவதில் வெற்றி கண்டது. இந்த வெற்றி, தமிழ் இனத்தை அழிக்கும் போருக்கு பக்கத்துணையாக விளங்கியது.
முள்ளிவாய்க்காலில் எமது தேசம் சந்தித்த இன அழிப்போடு எம் மீதான இன அழிப்பை சிறீலங்கா அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரவில்லை. கூட்டு மனோதிடம் உடைக்கப்பட்டு, சமூக கட்டமைப்புகள் சிதைவடைந்து, பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஒரு இனத்தின் இருப்புக்கான அத்தனை அம்சங்களும் ஆட்டம் கண்டிருந்த எமது தேசத்துக்கு எதிராக உடனடியாக கட்டமைப்புசார் இன அழிப்பை சிறீலங்கா ஆட்சிப்பீடம் தீவிரமாக முடுக்கிவிட்டது.
சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, எமது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவை கட்டமைப்புசார் இன அழிப்பின் அம்சங்களே. கட்டமைப்புசார் இனஅழிப்பை மேற்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், பண்பாட்டு இன அழிப்பையும் சமநேரத்தில் முடுக்கிவிட்டிருந்தனர்.
இதற்கு எமது தேசத்தின் இருப்பின் அடிப்படைகளில் முக்கியமான நிலமும், மக்களும் துரித கதியில் பலியாகினர். வெடிச்சத்தங்கள் இன்றி இரத்தம் சிந்தாமல் மேற்கொள்ளப்பட்ட மிக நுண்ணியமாக திட்டமிட்ட போர் எமது இனத்தை மீளமுடியாத பாதாளத்துக்குள் தள்ளியது.
குறிப்பிட்ட பகுதிகளில் இராணுவ மயமாக்கத்தை முன்னெடுத்து வருவது தொடர்பாக மெக்சிக்கோ அரசாங்கம் அண்மைக்காலங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமது இராணுவ மயமாக்கத்திற்கான காரணமாக போதைப் பொருள் கடத்தும் கும்பல்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்வைத்து வருகிறது.
ஆயினும் போதைப்பொருள் கடத்தும் கும்பல்களுக்கும் மெக்சிக்கோவின் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பது வெளிப்படையாக இருப்பினும், இராணுவ மயமாக்கலுக்கு நியாயம் கற்பிக்கும் முகமாக போதைப்பொருள் கடத்தும் கும்பல்களின் செயற்பாடுகளே முன்வைக்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தில் விடுதலைக்கான போர் தீவிரமடைந்திருந்த தருணங்களில், அவற்றை பலவீனப்படுத்தும் நோக்கோடு துணை இராணுவ குழுக்களை இந்தோனேசிய இராணுவம் ஈடுபடுத்தியது. குறித்த துணை இராணுவ குழுக்கள் ஆச்சே தேசத்தின் கட்டுமானத்தை ஆட்டம் காணச் செய்யும் முகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு உட்பட்ட பண்பாட்டு சீரழிப்பிலும், சமூக கட்டமைப்புகளை சிதறடிப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இது ஆச்சே மக்களின் உரிமைப் போரட்டத்தை வெகுவாக பாதித்தது. அதனாலேயே, இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே சுதந்திரத்திற்கான இயக்கத்திற்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள், துணை இராணுவக் குழுக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்ற அறிவித்தல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன், துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு படிப்படியாக அவர்களை கலைக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, மாண்புமிகு முதமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்துள்ள, எமது மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை பலவீனப்படுத்தும் நோக்கோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலிலேயே, வடக்கு மாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி நீதித்துறையும் காவல்துறையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்ற செய்தியை ஊதிப் பெருப்பிக்கும் முயற்சிகள் இடம்பெறுவது தொடர்பாக எமது மக்கள் விழிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.
தொடர்ச்சியான அழுத்தங்களுக்குள்ளும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்த இனம், மூச்சுவிடுவதற்கான ஒரு இடைவெளியாகவும், அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உணர்வாலும் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிபீடத்தை தூக்கியெறிவதற்கு பெருந்துணையாக மாறியது.
மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு மாற்றீடாக எமது மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இனஅழிப்பும் பண்பாட்டு இனஅழிப்பும் நிறுத்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பாடசாலை மாணவி வித்தியா மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவையும் படுகொலையையும் தனித்து ஒரு சம்பவமாக எடுக்க முடியாது என்பதையே வித்தியாவின் கொலைக்குப் பின்னர் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வேண்டுமென்றே தமிழ்-முஸ்லீம் உறவுகளை சீர்குலையச் செய்த தரப்புகள், பின்னர் தமிழ் மக்களுக்கு மத்தியில் பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டன.
இன அடையாளத்தால் இறுக்கமாக பிணைக்கப்பட்டடிருந்த சைவ சமயத்தவர்களுக்கும் கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் இடையில் சில இடங்களில் முரண்பாடுகளை உருவாக்க எத்தனித்த தரப்புகள், விடுதலைப் போர் விரட்டியடித்த சாதி வேறுபாடுகளை வளர்ப்பதற்கு கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றன.
இத்தகைய நோக்கத்தை கொண்ட தரப்புகளே, வித்தியாவிற்கு நீதி வேண்டி நடந்த போராட்டத்துக்குள் திட்டமிட்டு வன்முறையை உட்புகுத்தி நியாயமான போராட்டத்தை திசைதிருப்பி நீர்த்துப்போக செய்வதற்கு முயற்சித்து வருகின்றன.
வித்தியாவிற்கு நீதி வேண்டி நடந்த போராட்டத்துக்கு பங்கம் விளைவித்து, வன்முறைக் கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டதன் பின்னணியில் மூன்று துணை இராணுவக் குழுக்கள் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த மூன்று தரப்புகளையும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒரு துறையே வழிநடத்தியதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துறை சிறீலங்கா அரசின் அனுமதியின்றி செயற்படமுடியாது என்பதையும் நாம் அறிவோம். இந்தத் துறையே கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை படுகொலை செய்தமை, கடத்தல் காணாமல் போதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டமை பலரும் அறிந்ததே.
தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள பின்னணியிலேயே, காவற்துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறைகள் வெடித்துள்ளது.
ஆதலால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற மாயை உருவாக்கப்பட்டது.
இது இராணுவத்தை எந்தவொரு காரணம் கொண்டும் வெளியேற்ற மாட்டோம் என்று கூறிவருகின்ற தரப்புகளின் வாதத்தை பலப்படுத்துவதற்கான ஒரு நகர்வாக பார்க்கப்பட வேண்டும்.
இதனூடாக தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைப் பேணுவதே நோக்கம். இதன் மூலம், துணை இராணுவக் குழுக்கள் ஊடாக வன்முறையை தோற்றுவித்தவர்களின் நோக்கத்தை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
துணை இராணுவக் குழுக்களின் ஊடாக தமது நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்துவது இராணுவ புலனாய்வுத்துறைக்கு கைவந்த கலை. இது இலங்கைத் தீவில் மட்டும் இடம்பெறும் விடயம் அல்ல. இதற்கு உலகளாவிய பல உதாரணங்கள் உண்டு என பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எமது சமூகத்தை அழிக்க கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளே தற்போதைய சம்பவங்கள்!- சி.சிறீதரன் பா.உ.
Reviewed by NEWMANNAR
on
May 30, 2015
Rating:

No comments:
Post a Comment