அறிவியல் தொழில்நுட்பத் துறையில் எமது மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த முதன்மை விருந்தினர்களாக யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் பா.உறுப்பினரின் பாரியாருமான திருமதி.ஞானா சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும்போது,
இலங்கையில் புகழ்பெற்ற பாடசாலைகளில் பல இருக்கின்ற மண்ணின் பெருமையாக இருக்கும் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அதன் வரலாற்றில் பெருமைமிக்க சாதனையாளர்களை புத்திஜீவிகளை தந்திருக்கின்றது.
இதன் வளர்ச்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான தொழில்நுட்ப ஆய்வுகூடமும் பல சாதனையாளர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக இந்த தொழில்நுட்ப ஆய்வு இருப்பதை பின்வரும் வரலாறு நிச்சயம் சான்றுபகரும்.
இன்று வாழ்க்கையும் கல்வியும் செயன்முறைக்கூடாகவே வளர்த்துச் செல்லப்படுவதை நாம் அறிவோம். எட்டப்பட வேண்டிய இலக்கை இலகுவாக அடைவதற்கு யதார்த்தமான அணுமுறைகள் அவசியம்.
அது எல்லாவிதமான துறைகளுக்கும் பொருந்தும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் தோற்றுதோற்று பின்னர்தான் இறுதியாக உலகம் என்றைக்கும் போற்றும் வெற்றிகளை கண்டுள்ளார்கள். அவர்கள் வெற்றிகளை அடைவதற்கு நிறைய தேடவேண்டியும் உழைக்க வேண்டியும் இருந்தது.
இன்றைய காலத்தில் வெற்றிபெறுவதற்கு துணையாக சகலதும் எம் காலடியில் இருக்கின்றது.ஆனால் நம் இளைய சமுதாயம் மனதுகளை அலையவிட்டு வாழக்கையில் உறுதியான அத்திபாரத்தை இடுவதற்கு தவறுகின்ற துர்ப்பாக்கிய சூழல் வளர்ந்து வருகின்றது.
எனவே இதுபோன்ற வளங்களை மாணவர்கள் சரியான முறையில் முழுமையாக உச்சமாக பயன்படுத்தி வெற்றிகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இன்று நாசாவரை இந்த மண்ணின் மைந்தர்கள் வியாபித்து நிற்கின்றார்கள். தொழில் நுட்பத்துறையில் பல்வேறு கருதுகோள்களை விதிகளை பல இந்த மண்ணின் பேராசான்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
தமிழர்களின் அறிவு ஆளுமை இன்றைக்கு நேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே உணரப்பட்டது. அந்த அறிவு ஆளுமையின் சந்ததிகள்தான் இன்று பார்க்கின்ற நீங்கள்.நீங்கள் இந்த உலகத்தை வெல்கின்றவர்களாக மாறவேண்டும் என்றார்.
வட இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.தேவராணி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன், வடக்கு மகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன், துறைசார் பேராசான்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட கல்லூரி சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் எமது மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி
Reviewed by Author
on
June 14, 2015
Rating:

No comments:
Post a Comment