அண்மைய செய்திகள்

recent
-

20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அது தொடர்பான யதார்த்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் எடுத்துரைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அதனை எதிர்ப்பதை தவிர வேறு வழியேதும் இல்லையெனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றை தினம் கொழும்பில் நடைபெற்றது.

இவ்வொருங்கிணைப்பு குழு கூட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு சர்ச்சைகளுடன் காணப்பட்ட தேர்தல்கள் முறைமை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் 225 என்ற மொத்த எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது தொகுதிகள் 125 ஆக குறைக்கப்படுவதுடன் மாவட்ட விகிதாசாரம் 75 ஆகவும் தேசிய விகிதாசாரம் 25 ஆகவும் மறுசீரமைக்கப்பட்ட யோசனையை பிரதமர் முன்மொழிந்திருந்தார்.

இதற்கு சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பான இன்றைய (நேற்று) எமது சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அதன் இறுதியில் யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துமுள்ளனர்.

அவ்வாறான நிலையில் அவர்களுக்கான எந்தவிதமான நியாயங்களும் தீர்வுகளும் வழங்காத நிலையில் வெறுமனே யாழிலிலுள்ள 11தொகுதிகளை 6ஆக குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இதனால் வடக்கு மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயமும் ஏற்படுகின்றது. அவ்வாறு பிரதிநிதிகள் குறைவதானது மக்களின் அபிலாஷைகளை உரிமைகளை வென்றெடுப்பதை பலவீனப்படுத்துவதற்கும் மறைமுகமாக காரணமாகின்றது.

ஆகவே 125தொகுதிகள் என்ற புதிய முறையில் பிரதமரால் முன்மொழியப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை எம்மால் ஏற்கமுடியாது.

இவ்விடயம் தொடர்பாக முன்னதாகவும் நாம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக எமது நியாயங்களையும் யார்த்தங்களையும் எடுத்துக்கூறியிருந்தோம். அவ்வாறான நிலையில் மீண்டும் அவ்விடயங்களை நாம் எடுத்துரைக்கவுள்ளோம்.

எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமானால் அதனை எதிர்த்தே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழலுக்குள் தள்ளப்படும்.

அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் எமக்கு காணப்படும் தற்போதைய உறவிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமுள்ளது என்றார்.

அத்துடன் சந்திப்பில் பொதுத்தேர்தலொன்று வரவிருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்தல் விஞ்ஞானபம், அத்தேர்தலை எவ்வாறு கையாள்வது, தொடர்பாக ஒரு ஆரம்ப கட்டப்பேச்சுவார்த்தையை மேற்கொண்டதுடன் ஆசன ஒதுக்கீடு ஏனைய விடயங்கள் தொடர்பாக மீண்டும் கூடி பேசவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமையன்று ஒவ்வொரு கட்சிகளும் 20ஆவது திருத்தம் குறித்து தமது நிலைப்பாட்டை நாளை வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரியதுடன் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தேர்தல்கள் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திருத்தத்தை அரசியலமைப்பில் மேற்கொள்வதற்கு தக்க தருணம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Reviewed by Author on June 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.