புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைப்பது அச்சுறுத்தல்

போராடி வென்றெடுத்த சமாதானத்தை மீண்டும் பிரிவினைவாதிகளின் கைகளில் கொடுக்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது அச்சுறுத்தலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
லண்டன் மாநாட்டிலும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். யுத்தத்தை வென்றெடுத்த நாட்டில் வெகு விரைவில் மீண்டும் ஒரு குழப்பகர சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
புலம்பெயர் அமைப்புகளுடனும் புலி அமைப்புகளுடனும் லண்டனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்துள்ளன. அதேபோல் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் செயலாளரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு என்னவென்பது தெளிவாகத் தெரிகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேசத்தின் தேவைக்கும் புலம்பெயர் புலிகளின் தேவைக்கும் அமையவே நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை நாம் ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்தோம்.
ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்போது இவர்களின் உண்மை நிலைமை என்னவென்பது வெளிச்சத்துக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் வடக்கில் பிரிவினை வாதிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டுவருகின்றது. இன்னும் சிறிதுகாலம் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்குமானால் மீண்டும் ஈழத்துக்கான அடித்தளம் இடப்படும். எனவே நாட்டின் நிலைமைகளை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் . மீண்டும் நாட்டில் குழப்பங்கள் வருமானால் அது மூவின மக்களையுமே பாதிக்கும். எனவே தமிழ், முஸ்லிம் மக்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்கவேண்டும் .
மேலும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் அதற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவராது தேர்தலுக்கு போவதில் அர்த்தம் இல்லை. எனவே ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முன்வரவேண்டும்.
அதன்பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும். தேர்தலின் பின்னர் மீண்டும் எமது ஆட்சியை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதன் பின்னர் மீண்டும் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைப்பது அச்சுறுத்தல்
Reviewed by Author
on
June 13, 2015
Rating:
Reviewed by Author
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment