சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் நாம் எடுத்துக் காட்டிய தமிழர் ஒற்றுமை இத்தேர்தலிலும் தொடர வேண்டும்...

இறுதி யுத்த அவலங்களைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பெளதீக ரீதியாகப் பலவீனப் படுத்தப் பட்டு இருந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு தேவைப்பட்ட தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் உரிய நேரத்தில் கொடுக்கத் தகுதியற்று, தங்கள் சுயலாபங்களில் மட்டும் கவனம் செலுத்தியவர்கள், தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம். ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
தனது காரியாலயத்தில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர்களுடன் தொடந்து அவர் உரையாடுகையில், தமிழர் உரிமைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டங்களும் அக்காலகட்டங்களுக்கு தேவையான பொருத்தமான நகர்வுகளையும், போராட்ட வடிவங்களையும் வேண்டி நின்றன.
அந்தவகையில் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், ராஜபக்சவிடமிருந்து தேசத்தை மீட்கும் கடப்பாட்டை தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைத்தது. ராஜபக்சவை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதுகாக்க முயற்சித்து, படுதோல்வி அடைந்த முகவர்கள், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளை கேட்டு நிற்பது ஆச்சரியமானது.டக்லஸ் தேவானந்தா மகிந்தவிற்கு வாக்குப் போடுங்கள் என்று சொல்லி ராஜபக்ஷவை நேரடியாக காப்பாற்ற முனைந்தார்,
கஜேந்திரகுமாரோ, வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கேட்டு மறைமுகமாக ராஜபக்சவின் இருப்பை காப்பாற்ற முயன்றார். இவர்களின் வேண்டுகோள்களையும், பிரச்சாரங்களையும் முற்றாக நிராகரித்த தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலையும் தலைமையையும் முழுமையாக ஏற்று பெருமளவில் வாக்களித்தனர், வெற்றியும் பெற்றனர். தமிழர் ஒற்றுமையின் பலத்தால் பெற்றெடுக்கப்பட்ட வெற்றி, அடுத்த படியை நோக்கி, அடுத்த இலக்கினை நோக்கி உறுதியாக செல்ல வேண்டியுள்ளது.
தமிழர்கள் தமது ஒற்றுமையின் பலத்தினால் ராஜபக்சவிடமிருந்து தேசத்தை மீட்ட பொழுது, தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை சிங்களவர்களும், சர்வதேசமும் கண்டுகொண்டனர்.
அந்த ஒற்றுமை இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும், அந்த ஒற்றுமை இந்தத் தேர்தலில் உறுதியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும், அப்பொழுது தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தைக் கொண்டு, சர்வதேச ஆதரவுடன் தமிழர்களின் சுயாட்சி குறித்த முன்னெடுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் முன்னெடுக்கும் என்று உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்
சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் நாம் எடுத்துக் காட்டிய தமிழர் ஒற்றுமை இத்தேர்தலிலும் தொடர வேண்டும்...
Reviewed by Author
on
July 31, 2015
Rating:
Reviewed by Author
on
July 31, 2015
Rating:

No comments:
Post a Comment