பூமியிலிருந்து மேகத்துக்கு செல்லும் மழை: பிரமிப்பூட்டும் காட்சி
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளான ஸாம்பியா மற்றும் ஸிம்பாப்வேக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
ஒரு கி.மீ.க்கு மேல் பாயும் அகல நீர்ப் பரப்பும் 100 மீற்றருக்கு மேல் ஆழமும் உள்ள நீர்வீழ்ச்சி உலகில் விக்டோரியா மட்டும்தான்.
வட அமெரிக்காவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சியை போல இரு மடங்கு உயரமும், ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியை விட இருமடங்கு அகலமும் கொண்டது.
அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் உள்ள இகாஸூ நீர்வீழ்ச்சி மட்டுமே விக்டோரியா நீர்வீழ்ச்சியோடு போட்டியிடக் கூடியது.
40 கி.மீ. தூரத்துக்கு மேல் இதன் கர்ஜனை ஒலி கேட்கும். 50 கி.மீ. தூரத்திலிருந்தும் அருவியின் உயரத்தைவிட இருமடங்கு எழும் இதன் அடர்த்தியான வெண்புகையை பார்க்கலாம்.
அந்த புகையோடு அருவியின் சிதறும் தூறல் மேல்நோக்கி செல்லும், பனிபடர்ந்த மேகம் அந்த அருவிக்கு சற்றே உயரத்தில் தவழும்போது, மழை பூமியிலிருந்து மேகத்துக்கு தலைகீழாக செல்வதாக இருக்கும். இந்த தூறலால் அந்த பகுதியே மழைக் காலமாக காட்சியளிக்கும்.
பகலில் தெறிக்கும் நீர்த்திவலைகளில் வானவில் தோன்றுவது மட்டுமல்ல, பவுர்ணமி இரவிலும் நிலவு, சூரிய ஒளியை எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது இதை ’மூன்பவ்’ என்று அழைக்கின்றனர்.
இந்த அருவி ஸாம்பேசி ஆற்றில் உள்ளது. பரந்த நீர்வீழ்ச்சி குன்றுகளுக்கு இடையே திடீரென சுருங்கி குறுகலான பள்ளத்தாக்குகளிலும் பயணிப்பது அழகு.
இந்த அருவி நேரடியாக விழும் முதல் தளத்தில் உள்ள பாறை அமைப்பும் நீர்நிலையும் கொதிக்கும் குளம் போல காட்சி தருவதால் பாயிலிங் பாட் என்று அழைக்கின்றனர்.
அருவியின் கீழ்பகுதியில் 39 வகையான மீன்களும், அருவியின் மேல்தளத்தில் 89 வகையான மீன்களும் வாழ்கின்றன. மேலும் இந்த அருவியின் வறட்சிகாலம் செப்டம்பரிலிருந்து ஜனவரி வரை இந்த சமயத்தில் பாறை முகடுகள் தெளிவாக தெரியும் பள்ளத்தாக்குகளில் நடந்துகூட செல்லலாம்.
ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு மேல் நீர் மிகுந்து வரத் தொடங்குகிறது.
யானை, ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை, மான், முதலை, குரங்குகள் அதிகமாகவும் சிங்கம், சிறுத்தை அரிதாகவும் அருவியின் மேற்பகுதியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன.
இந்த பகுதிக்கு 1905 ம் ஆண்டில் ரயில் சாலை, பாலம் அமைப்பதற்கு முன்னால், இந்த அருவி பார்ப்பாரற்று கிடந்தது. ஆனால், இப்போது ஆற்றின் இரண்டு பக்கத்திலும் நல்ல சுற்றுலாத் தலமாக வருமானம் ஈட்டித்தருகிறது.
யுனெஸ்கோவும் இந்த அருவியை உலகின் பாரம்பரியத் தளமாக அறிவித்திருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த அருவி 1885 ம் ஆண்டு டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விக்டோரியா ராணியை கவுரவிக்கும் விதமாக விக்டோரியா என்ற பெயரை வைத்தார்.ஆனாலும், அருவிக்கு அருகில் வாழ்ந்த பழங்குடியினர் அதை முன்பே அறிந்திருந்தனர். மேலும் மலையேற்றமும் வேட்டையாடவும் தெரிந்தவர்கள் அந்த இடத்துக்கு பழக்கப்பட்டிருந்தனர்.
அங்குள்ள கறுப்பர் இன மக்கள் ’மோசி ஓ துன்யா’ (வெண்புகையும் குமுறல் ஒலியும்) என்று அழைத்தனர். இந்த பெயரையே 2013 லிருந்து ஸிம்பாப்வே அரசும், உலக வரலாறும் இரண்டு பெயர்களையும் அங்கீகரித்துள்ளது.
ஆற்றின் மேல் பகுதியிலிருந்து அருவியை அடைவதற்கு முன்னால் லிவிங்ஸ்டன், ஒரு தீவை துடுப்பின் உதவியால் கடந்து சென்றார். அந்த தீவு அவர் பெயரால் இப்போது அழைக்கப்படுகிறது.
300 பேர் கொண்ட குழுவோடு கிறிஸ்தவ மதத்தை பரப்ப சென்றவர்கள், அருவிக்கு அந்தப் பக்கம் உள்ள மக்களை சந்திக்க தடை வந்ததாகவே ஆரம்பத்தில் வருந்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து மேகத்துக்கு செல்லும் மழை: பிரமிப்பூட்டும் காட்சி
Reviewed by Author
on
July 01, 2015
Rating:

No comments:
Post a Comment