தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற மற்றும் நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் இரண்டு நூல்களை வெளியிட்ட வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் ஒரு இலங்கையரின் குரல் என்ற சிங்கள மொழி மூலமான நூலும் அந்த நூலின் ஆங்கிலப் பிரதியுமே அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் வெ ளியிடப்பட்டது. பாராளுமன்றத்திலும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய விசேட சந்தர்ப்பங்களின்போதும் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரைகளை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.
நிகழ்வில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்
மக்கள் தங்களது அறிவு, புத்திக்கூர்மை மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முன் அனுபவங்களை வைத்து தெரிவை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் மக்களுக்கான தங்களது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அவர்களது பதவிகளின் கடமைப் பொறுப்புக்களை ஏற்கின்றபோது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டும்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் செய்துள்ள சேவைகள் பாராட்டத்தக்கவை. அத்தோடு அமைச்சர் சமரசிங்கவின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகின்றேன் என்றார்.
நிகழ்வில் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவி கருணாநாயக்க, டபிள்யு.ஜே.எம். லொக்கு பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க ஆகியோரும் வெளிநாட்டுத் தூதுவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்...
Reviewed by Author
on
August 08, 2015
Rating:
Reviewed by Author
on
August 08, 2015
Rating:


No comments:
Post a Comment