எதிர்க்கட்சித் தலைவரை மாற்றியே தீருவோம்...
எதிர்க்கட்சித் தலைவரை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம். அதில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல் கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் அடுத்தவாரமும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். நேற்று முன்தினம் சபாநாயகருக்கு நாம் இதுதொடர்பான விடயங்களை எடுத்துக்கூறியபோது எமது பக்க நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல் வீரவன்சவும் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ்குணவர்த்தன குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற எமது அணியில் அதிகமான எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களை விட எமது அணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
எனவே எமது அணிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும். இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன் போது எமது பக்க நியாயம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே கிடைக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினோம். இந்த விவகாரத்தில் எமது பக்கத்தில் நியாயம் இருப்பதை சந்திப்பின்போது சபாநாயகர் கருஜயசூரியர் உணர்ந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவரை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். அதில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். எதிர்வரும் வாரத்திலும், சபாநாயகரை சந்தித்து மேலும் விடயங்களை முன்வைப்போம். சபாநாயகரின் தீர்ப்பை நாம் சவாலுக்கு உட்படுத்த மாட்டோம். ஆனால் எமக்கு நியாயம் கிடைக்கவேண்டும். நியாயமற்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாங்கள் பெற்றுக்கொள்ளும் வரை எமது முயற்சிகளை தொடருவோம். இதேவேளை மஹிந்தராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் அதிகமான அமைச்சர்களை கொண்டுள்ளதாக விமர்சித்தே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. அத்துடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக வரையறுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இன்று அமைச்சரவையின் எண்ணிக்கையை பாரிய அளவில் அதிகரித்துக்கொண்டுள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் செயற்பட்டிருக்கலாம். ஆனால் சிவில் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சுக்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கூட தேசிய அரசாங்கத்தை கொண்டு சென்றிருக்கலாம் என்றார்.
இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலர் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனால் கட்சியின் ஏனைய உறுபினர்களை கட்சியின் தலைமைதத்துவம் உட்பட உயர்மட்ட குழுவினர் புறக்கணிக்கின்றனர். பாராளுமன்றத்திலும் எமது உரிமைகளை முடக்கும் வகையில் செயற்படுவதை எம்மால் அனுமத்திக்க முடியாது. கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் போது இவ்வாறான சிக்கல் நிலைமைகள் இருக்கவில்லை. எனினும் இன்று நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் முழுமையாக அடக்குமுறைகளும் சர்வாதிகார போக்குமே உள்ளது.
இப்போதிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளை இணைத்தாலும் கூட எமது எண்ணிக்கையளவில் வராது. ஆகவே எமது அணியினர் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். சம்பந்தனை நீக்கிவிட்டு எமது அணியினர் சார்பில் குமார் வெல்கமவை நியமிக்க வேண்டும் அதை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம். அதேபோல் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது நாம் எதிர்க்கட்சியாக செயற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரை மாற்றியே தீருவோம்...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:
Reviewed by Author
on
September 12, 2015
Rating:


No comments:
Post a Comment