அண்மைய செய்திகள்

recent
-

100 வருட பூர்த்தியைக் கொண்டாடும் இலங்கை டெனிஸ் சம்மேளனம் சர்வதேச அரங்குக்கு பிரவேசிக்கத் திட்டம் ; இக்பால் பின் ஐஸாக்


ஆசியாவின் இரண்டாவது மிகப் பழைமையான இலங்கை டெனிஸ் சம்மேளனம்  தனது 100 வருட பூர்த்தியையும் கொண்டாடவுள்ளதுடன் சர்வதேச அரங்கிற்குள் பிரவேசிக்க திட்டமிட்டுள்ளதாக  இலங்கை டெனிஸ்  சம்மேளனத்தின் தலைவர் இக்பால் பின் ஐஸாக்  தெரிவித்தார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை டென்னிஸ் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை டெனிஸ்  சம்மேளனத்தின் தலைவர் இக்பால் பின் ஐஸாக்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 பெருமைக்குரிய ஆசிய டெனிஸ் சம்மேளனத்தின் வருடாந்த பொது ஒன்றுகூடல் இந்த மாதம் 28 ஆம் திகதி  இலங்கையில் முன்னெடுக்கப்டவுள்ள நிலையில், இலங்கை டென்னிஸ் சம்மேளனம் தனது 100 வருட பூர்த்தியையும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

 இலங்கையில் இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ஆசிய டெனிஸ் சம்மேளனம் இதுவரையில் முன்னெடுத்திருக்கவில்லை. இதன் மூலம் உள்நாட்டு டென்னிஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆசியாவின் அயல் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

 டெனிஸ் விளையாட்டு மீதான ஆர்வம் இலங்கையர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை டெனிஸ் சம்மேளனம் சர்வதேச அரங்கிற்குள் பிரவேசிக்க தீர்மானித்துள்ளது. இந்த விளையாட்டில் நாம் நாட்டு இளைஞர்கள் தம்மை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான சரியான தருணம் இது என நினைக்கின்றேன்.

அண்மைக்காலங்களில் பொது மக்கள் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பெருமளவான இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட ஆர்வமாக உள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் விளையாட்டுக்கு பொதுவாக பெருமளவு வரவேற்பு காணப்படுகிறது. சரியான வாய்ப்புகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலமாக, எமது இளைஞர்களுக்கு சர்வதேச மட்டத்துக்கு செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அண்மைக்காலங்களில் இடம்பெற்ற போட்டித் தொடர்களில் எமது இளைஞர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதை நாம் ஏற்கனவே பார்வையிட்டுள்ளோம். இது ஆரம்பம் மட்டுமே.

டெனிஸ் விளையாட்டு ஏற்கனவே பிரபல்யமடைந்து வரும் நிலையில், தனியார் துறைக்கும் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்துடன் இணைந்து சர்வதேச ரீதியில் பிரசன்னத்தைப் பெற்றுக் கொடுத்து, இலங்கைக்கு பெருமையையும் தேடித்தரும் செயற்பாட்டை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

டென்னிஸ் விளையாட்டுக்கு இலங்கையை சர்வதேச ரீதியில் நாடும் பகுதியாக அபிவிருத்தி செய்வதற்கும், அதன் மூலமாக பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் மூலம் தேசிய இலக்குகள் பெருமளவு அனுகூலம் கிடைப்பதாக அமைந்திருக்கும். தனது நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு தன்னை தயார்ப்படுத்தும் வகையில், இலங்கை டென்னிஸ் சம்மேளனம், நாட்டில் டென்னிஸ் விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

இதில் பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக வெவ்வேறு போட்டித் தொடர்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. முதல் மூன்று நிபுணத்துவ மட்ட போட்டி நிகழ்வுகளின் மூலமாக, இலங்கையின் திறமைகளுக்கு பெறுமதியான அடித்தளம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜுன் மாதத்தில் மேலும் மூன்று கனிஷ்ட மட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இறுதியாக ஒக்டோபர் மாதம் 18 வயதுக்குட்பட்ட இரு பாலாருக்குமான போட்டித்தொடர் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டித் தொடர்கள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்தன. சர்வதேச மட்டத்திலிருந்து 120 க்கும்  அதிகமான வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த போட்டித் தொடர்கள் மூலமாக, இலங்கையின் திறமைகளை வெளிக்காட்ட சிறந்த வாய்ப்பு  கிட்டியிருந்ததுடன், உள்நாட்டு வீரர்களுக்கு சர்வதேச மட்ட அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்திருந்தது. அயல்நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் டெனிஸ் ஊடாக நட்புறவை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியிருந்தது என  அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் டெனிஸ் விளையாட்டு 1868 ஆம் ஆண்டு பிரித்தானியர்களான பி. எப். ஹடொவ், பொன்பிளன்கியு மற்றும் சி.எச்.ஏ. ரொஸ் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கை டெனிஸ் சம்மேளனம் பெறுமதி வாய்ந்த நீண்ட வரலாற்றை 1915 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல் கொண்டுள்ளது.

அக்காலப்பகுதியில் ஆளுநராக திகழ்ந்த சேர் ரொபர்ட் சால்மர்ஸ் இந்த சம்மேளனத்தின் முதலாவது தலைவராக  கடமையாற்றியிருந்தார். இலங்கையில் தொடர்ச்சியாக இந்த விளையாட்டுக்கு வரவேற்பு காணப்பட்டிருந்ததுடன், 1990 ஆம் ஆண்டு தனது 75ஆவது வருட பூர்த்தியை கொண்டாடிய வேளை, அதைக் குறிக்கும் வகையில் இலங்கை  அரசாங்கத்தினால் ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் அக்காலப்பகுதியில் நாட்டின் ஜனாதிபதியாக திகழ்ந்த மறைந்த ரணசிங்க பிரேமதாஸவினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



100 வருட பூர்த்தியைக் கொண்டாடும் இலங்கை டெனிஸ் சம்மேளனம் சர்வதேச அரங்குக்கு பிரவேசிக்கத் திட்டம் ; இக்பால் பின் ஐஸாக் Reviewed by Author on November 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.