எத்தனை காலம் எடுத்தாலும் மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்...
அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ள 725 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 725 மோசடிகளுடன் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாரும் உறவினர்களும் மறைமுகமாகத் தொடர்புபட்டிருக்கின்ற அதேவேளை இவற்றில் 25 மோசடிகளில் மஹிந்த குடும்பத்தாரின் நேரடித் தொடர்புகள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்ணித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேசம் மைத்திரிபாலவின் ஜனநாயக ஆட்சியையும் ரணிலின் பொருளாதார நோக்கையும் வியந்து பாராட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எத்தனை காலம் எடுத்தாலும் மேலே குறிப்பிட்ட மோசடியாளர்களை விட்டுவைக்கப் போவதில்லை.இன்றைய அரசாங்கம் யாருக்காகவும் எவரிடத்திலும் மண்டியிடப் போவதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோர் புலிகள் அமைப்பின் பிரதானிகளான கே.பி., தர்மலிங்கம் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சபையில் காட்சிப்படுத்தினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 9.30 க்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் இடம்பெற்ற 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 9 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சபையில் சமூகமளித்திருந்தார்.
இங்கு அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2014 நவம்பர் மாதம் 21 ஆம் திகதியானது இந்நாட்டின் புரட்சிக்கான ஒரு யுகத்தின் நாளாக அமைந்திருந்தது. அன்றைய தினம்தான் இன்றைய எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தோன்றி தானே ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கின்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பதை அறிவித்தார். அவருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இணைந்திருந்தமையையும் இங்கு நினைவூட்டிக் கொள்கிறேன்.
அந்த வரலாற்றுப் புரட்சியின் ஒருகால பூர்த்தியில் தான் எமது அரசாங்கத்தின் முதலாவதும் வெற்றிகரமானதுமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ராஜபக்ஷ நிர்வாகத்தினால் சாதிக்க முடியாத பல விடயங்களை நாம் 100 நாள் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருந்தோம். அத்தியாவசியப் பொருள் விலைக்குறைப்பு முதல் பல்வேறு நிவாரணங்களையும் நாம் பெற்றுக் கொடுத்திருந்ததை மறுக்க முடியாது.
2010 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷ தனது மார்பில் அடித்துக் கொண்டு அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாகக் கூறனார். ஆனால் அது இதுவரை நிறைவேறவில்லை. எனினும் நாம் முன்வைத்த உறுதிமொழிகளை செவ்வனே நிறைவேற்றிருக்கின்றோம்.
இந்தப் பாராளுமன்றத்தில் குரோதத்தன்மை காட்டப்பட்டு வருகின்றது. எமது ஜனாதிபதிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் மிகவும் மோசமானதும் கீழ் மட்டத்திலானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இவ்வாறு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமைக்காக நாம் எவரையும் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லவில்லை. வெள்ளை வேன் இப்போது கிடையாது. பூரணமான ஊடக சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கின்றது.
எமது அரசாங்கத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தை பிரதானப்படுத்தி உறுப்பினர் திலக் மாரப்பன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இது 28 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ள சிறந்த முன்னுதாரணமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 10 மாதங்களே நிறைவடைந்துள்ளன. எமது தேசிய அரசாங்கம் அமையப்பெற்று நான்கு மாதங்களே ஆகின்றன. அதேபோன்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு 12 தினங்களே நிறைவடைந்துள்ளன.
இப்படியான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாட்டுக்கு சிறந்த ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்துள்ள தலைவராக திகழ்கின்ற அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் சிறந்த எதிர்கால பொருளாதார நோக்கினைக் கொண்டு செயற்பட்டு வருகிறார். இந்த இரு தலைவர்களின் நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் இலக்குகளையும் இன்று சர்வதேசம் நன்கு உணர்ந்து புரிந்து கொண்டுமுள்ளது ஏற்றுக்கொண்டுமுள்ளது.
அந்த வகையில் நாம் சர்வதேசத்தை வெற்றிக் கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆதலால் தான் சர்வதேச விசாரணை என்பதற்குப் பதிலாக உள்ளக விசாரணைக்கான ஏதுநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
நாடு காட்டிக் கொடுக்கப்படுவதாகவும் தாரை வார்க்கப்படுவதாகவும் இங்கு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் யாருக்காகவும் எவரிடத்திலும் மண்டியிட்டு விடப்போவது கிடையாது.
மஹிந்த ராஜபக் ஷவின் நிர்வாகத்தின் போது எமது நாட்டையும் வளங்களையும் சொத்துக்களையும் கொள்ளையிட்டவர்களின் தகவல்கள் தரவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அரச நிதிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து, உக்ரேன், டுபாய், சீசெல்ஸ் ஆகிய நாடுகளிலும் இன்னும் சிறு சிறு தீவுகளிலும் கூட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. இவ்வாறு 725 பாரிய ஊழல் மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த 725 பாரிய மோசடிகளிலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் சிறியோர் முதல் பெரியோர் வரையிலும் இன்னும் அவர்களது உறவினர்களும் மறைமுக தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற அதேவேளை 25 பாரிய ஊழல் மோசடிகளில் மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தார் நேரடியாகவே தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் எமது வெளிநாட்டுக்கொள்கை சிறந்த முறையில் பேணப்பட்டு வருவதால் மேற்படி மோசடிகளை கண்டுப்பிடித்தல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு மேற்படி நாடுகளின் ஒத்துழைப்புகள் கோரப்பட்டிருக்கின்றன.
பிற்பொக்கட்காரனைக் கைது செய்வது போன்று இவ்விடயத்தில் செயற்பட முடியாது. அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முறையாக இடம்பெறும். அத்துடன் காலம் எடுத்தாலும் குற்றவாளிகளை நாம் விட்டு வைக்கமாட்டோம்.
மோல்ட்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
அத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு பெரும் ஆவல் கொண்டு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அதேபோன்று ஜனாதிபதி மைத்திரியிடம் எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நலத்தையும் விசாரித்துக் கொண்டனர். இது எமது தலைவர்களின் நிலைமையாகும்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை லீ குவான் இ வாகவும் சர்வதேசத் தலைவர்கள் வர்ணித்து போற்றுகின்றனர்.
எமது அரசாங்கம் சீனாவுடன் விரிசலைக் கடைப்பிடித்து வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. சீனாவுடனான எமது உறவில் எந்த விரிசலும் கிடையாது. நாம் சிறந்த உறவையே பேணி வருகிறோம்
சீனாவுடனான உறவுகள் பேணபட்டு வருகின்ற அதேவேளை நாம் அமெரிக்காவுடனும் சிநேகபூர்வத்தை கடைப்பிடித்து வருகிறோம். அதேபோன்று தான் ரஷ்யாவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் கூட எமது உறவு பலமாகவே இருக்கின்றது.
இதேவேளை புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம், நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்மீது குற்றம் சாட்டுகிறார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரே புலிகள் அமைப்பின் பிரதானிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர். 2014 ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவையென சில புகைப்படங்களை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் காட்டினார். அத்துடன் இப்படங்களை பிரேம் செய்து தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறினார்.
எத்தனை காலம் எடுத்தாலும் மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்...
Reviewed by Author
on
December 03, 2015
Rating:
Reviewed by Author
on
December 03, 2015
Rating:


No comments:
Post a Comment