அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப் பொங்கல்!- சீமான்

காரிருள் நீக்கி, கொடும்பகை அழித்து, புத்தொளி வீசி, புவி அருள் செய்யப் புறப்பட்டு வருகிறது தமிழரின் புத்தாண்டு.
காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் அன்னைத் தமிழினம் விழிகளின் ஓரம் நம்பிக்கைச் சிவப்பேற்றி வரும் நாட்கள் வாழ்வினைத்தரும், வசந்தத்தினை வரவேற்கும் எனக் காத்துக் கிடக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டு, நிலம்,நீர்,காடு என அனைத்தையும் இழந்து விட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் தங்கள் அடிமை இருள் நீங்க தங்களைத் தாங்களே மீள் எழுப்பி ஒரு புதிய புரட்சிப் பூபாளம் இசைக்க அணியமாகி இருக்கிறார்கள்.

பாதையைத் தேடாதே உருவாக்கு என்று முழங்கிய எனதுயிர் அண்ணன் எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரனை தத்துவமாகவும், வாழ்வியல் நெறியாகவும் கொண்டு தமிழக வீதிகளில் புதிய இளம் தலைமுறை பிள்ளைகள் எதிர்காலம் கையளிக்க இருக்கிற நம்பிக்கைகளைச் சார்ந்து குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

கொடும் போரினாலும், மழை நீரினாலும் அல்லலுற்ற அன்னைத்தமிழினம் மலரும் புத்தாண்டில் தங்களுக்குத் தாங்களே கரம் கோர்த்து, கட்டமைத்து மீள் எழுப்ப எத்தனித்து வருகிறார்கள்.

எம் மண்ணின் நிலவளம், நீர்வளம், காட்டுவளம், கனிமவளம் பாதுகாக்க தமிழின இளையோர் தாயகத்தமிழகத்தில் தயாராகி விட்டார்கள்.

வாடிவாசலில் வந்து நிற்கும் ஜல்லிக்கட்டுக் காளையை இனி சட்டக்கயிறுப் போட்டு தடுக்க இயலாது. நம்பிக்கை திமிலோடு காளை பாய, அதை நம் இளையோர் அடக்க,புன் முறுவல் உவகையோடு தொடங்கட்டும் தமிழர் புத்தாண்டு.

அனைத்து நம்பிக்கைகளையும் அள்ளி எடுத்துக் கொண்டு, புதுப்புனலாய் தை நீராள் தவழ்ந்து வருகிறாள்.

சாணி மெழுகிய தரையில், அரிசி மாவில் கோலமிட்டு, புதுப்பானை மஞ்சள் இட்டு, மாட்டுக்கும், மனிதருக்கும்,  நாட்டுக்கும் நல்லவருக்கும், நல்லவை விளைய, அல்லவை ஒழிய புதுப்பொங்கல் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் பெருமைத் திருவிழாவான தமிழ்ப் புத்தாண்டில் தொடக்க நாளான தை முதல் நாளில் எனது தாய்த் தமிழ் உறவுகளுக்கு..நம்பிக்கைக் கரங்களோடு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை அள்ளித்தருகிறேன்.



அநீதிக்கு எதிராக, இனப்படுக்கொலைக்கு எதிராக, தீண்டாமை, சாதிமத ஏற்றத் தாழ்வு, மணல் கொள்ளை, மது, மறுக்கப்பட்ட நீர் நில உரிமைகள், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை, பாலியல் வன் கொடுமை, பெண்ணடிமை, வேலை வாய்ப்பின்மை, தீண்டாமை,மண்ணின் வளச்சுரண்டல், மக்களின் நலச்சுரண்டல் என அனைத்து இழிவுகளுக்கும், அழிவுகளுக்கும் எதிராக.. உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப் பொங்கல்.

என் உயிருக்கு இனிப்பான தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும், என் இனிய தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப் பொங்கல்!- சீமான் Reviewed by NEWMANNAR on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.