தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள்....ஒரே பார்வையில் படங்கள் இணைப்பு

12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. அத்தோடு13ஆவது தெற்காசியப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்களாக நடைபெற்றிருந்தது.
இதில் எட்டு நாடுகளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 23 போட்டி வகைகளைக் கொண்ட இவ்விளையாட்டு விழாவில் 20 போட்டிகளில் இலங்கை கலந்துகொண்டதோடு சாதனைகளையும் படைத்திருந்தது.
நிறைவுவிழா
குஹாத்தி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நிறைவு விழா நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக எட்டு நாடுகளையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் மைதானத்தைச் சுற்றி கொடிகளை அசைத்தபடி வலம் வந்தனர். நிறைவு விழாவில் இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் சோனோவால், அசாம் முதல்வர் தருண் கோகாய், மேகாலய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெனித் சங்மா, நேபாள விளையாட்டுத்துறை அமைச்சர் சத்ய நாராயணன் மண்டல் நேபாள ஒலிம்பிக் சங்கத்தலைவர் ஜீவன் ராம் ஷ்ரேஷ்தா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
அதன்பின்னர் தெற்காசிய விளையாட்டுத் தீபம் அணைக்கப்பட்டதோடு 12ஆவது தெற்காசியப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் சோனோ வால் 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைகின்றதென உற்சாகத்தோடு உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுக்க அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து வானைப் பிளக்கும் கண்கவர் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
தெற்காசிய ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, தெற்காசிய ஒலிம்பிக் சபைத் தலைவர் என்.ராமச்சந்திரனிடம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சோனாவல் ஒப்படைத்தார். அடுத்து 13ஆவது விளையாட்டு விழாவை தலைமையேற்று நடத்தும் நடத்தும் நேபாள ஒலிம்பிக் சங்கத்தலைவர் ஜீவன் ராம் ஷ்ரேஷ்தாவிடம் கொடியை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
அதன்பின்னர் நேபாளத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேபாளத்தின் கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அத்தோடு குஹாத்தி மற்றும் சிலோங் மாநிலங்களின் கலாசார நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. அதனையடுத்து உத்தியோக பூர்வமாக 12ஆவது தெற்காசிய விளையாட்டுப்போட்டிகள் நிறைவடைந்தன.
குத்துச்சண்டை
12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளான நேற்று பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியின் இலங்கை வீராங்கனை அனுஷா கொடித்துவக்கு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.
பெண்களுக்கான குத்துச்சண்டை இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரிகோம் மற்றும் இலங்கையின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான அனுஷா கொடித்துவக்கு ஆகியோர் 51 கிலோ கிராம் பிரிவில் மோதிக் கொண்டனர்.
ஆயிரக்கணக்கான இரசிகர்களின் பிரசன்னத்துடன் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை மேரி கோம், நொக் அவுட் முறையில் வென்றார். 90 விநாடிகள் நடந்த போட்டியில் தனது முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் மேரிகோம். அவரின் ஆவேசமான தாக்குதலை எதிர்கொண்ட இலங்கையின் அனுஷா கொடித்துவக்கு இரண்டு முறை நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதன் பின்னர் சிறிது நேரம் மருத்துவ உதவிப் பெற்று மீண்டும் வந்து விளையாடினார். அதன்பிறகு தன்னம்பிக்கையை சற்றும் தளரவிடாது மோதிய அனுஷா இறுதியில் நொக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்திருந்தது. அத்துடன் குத்துச்சண்டைப்பிரிவில் அனைத்து பதக்கங்களையும் இந்தியா தன்வசப்படுத்தியமையும் விசேட அம்சமாகும்.
துப்பாக்கி சுடுதல்
25மீற்றர் ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை தனதாக்கியதோடு பாகிஸ்தான் வீரர் வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.
பெண்களுக்கான 10மீற்றர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் இந்தியாவே சுவீகரித்ததோடு இப்பிரிவிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருந்தது.
தடகளத்தில் சாதனைகள்
இவ்விளையாட்டு விழாவின் போது தடகளப்போட்டிகளில் பன்னிரண்டு தெற்காசிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. இலங்கைவீரர்களான கிஷான் இஷான் 100மீற்றர் ஓட்டத்திலும், தடியூன்றிப்பாய்தலில் சந்தருவானும் சாதனைகளை படைத்தனர். அதேவேளை ஏனைய பத்து சாதனைகளையும் இந்திய வீரர்களே நிலைநாட்டியுள்ளனர். குறிப்பாக 5000மீற்றர் 10ஆயிரம் மீற்றர், நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவிலும், குண்டுவீசுதலில் பெண் கள் பிரிவிலும் முப்பாய்ச்சலில் ஆண்கள் பிரிவிலும் இந்திய வீரர்கள் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.
நீச்சலில் சாதனை
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜூலியன் போலிங் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமையே இதுவரையில் சாதனையாகவிருந்தது. இந்த சாதனையை இலங்கையின் நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க ஏழு தங்கப் பதக்கங்களை வென்று முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டாமிடம்
இலங்கை அணி 25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலம் உள்ளடங்கலாக 186 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தினை தனதாக்கியிருந்தது. முதலிடத்தில் இந்தியா 188 தங்கம், 90 வெள்ளி 30 வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தம் 308 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள்....ஒரே பார்வையில் படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment