அண்மைய செய்திகள்

recent
-

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்!


கர்நாடக ஹேமாவதி ஆற்றில் பருவமழை காலத்தில் முக்கால் பகுதி மூழ்கி தெரியும் 150 ஆண்டுகள் பழமையான ரோஸரி சர்ச், அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
ஆற்றுக்குள்ளே அதிசயம்

இந்த புனித ரோஸரி தேவாலயம் கர்நாடகவில் உள்ள ஹஸன் செட்டிஹள்ளி சாலையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் ஹேமாவதி அணைக்கு அருகில் ஆற்றில் உள்ளது.

கரையிலிருந்து பார்க்கும்போது, ஒரு மூழ்கிய கப்பலைப் போல மேற்பகுதி மட்டும் தெரிகிறது. நீர் வற்றிய பிறகு, முழுத்தோற்றத்துடன் கம்பீரமாக இது வெளிப்படுகிறது.

நீருக்குள் மூழ்கியிருந்த தேவாலயத்தின் பல பகுதிகள் கரைந்து சிதைந்து அழிந்த நிலையில் இருக்கிறது.

ஒருமுறை வெள்ளத்தில் மூழ்கி வெளிப்பட்டாலே புதிய கட்டடங்களையும் பொலிவை இழக்கச் செய்வது தண்ணீரின் தன்மை.

ஆண்டுதோறும் மூழ்கி வெளிப்படுவதால் இந்த அழகிய தேவாலயம் சிதிலமடைவது தடுக்க முடியாமல் போனது.

அதனால், அருகில் சென்று பார்க்கும்போது, எலும்புக்கூடு போன்ற அதனுடைய அழிந்த நிலை வரலாற்றுப் பிரியர்களை வதைக்கிறது.

வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையிலும் பயணிகள் படகுகளில் பயணித்து அந்த சுவர்களுக்கு இடையில் சென்றும் அதன் சுவர்களில் ஏறியும் தொட்டும், இந்த வரலாற்று பொக்கிஷத்தை ரசிக்கிறார்கள்.

பெலூரு, சிரவணபெலகோலா, ஹெலிபிட் போன்ற கர்நாடகா சுற்றுலா தலங்களை பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரோஸரி சர்ச்சையும் பார்க்க வருகின்றனர்.





கட்டப்பட்ட காலமும் காரணமும்

ஹேமாவதி நதிக்கரையில் செட்டிஹள்ளி ஹாசன் நகருக்கு அருகே இந்த தேவாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

கிராம மக்களின் தகவலின்படி, பிரஞ்சு மிஷினரிகள், அலூர், மற்றும் சக்லேஷ்பூர் செல்வந்தர்கள், பிரிட்டிஷ் எஸ்டேட் உரிமையாளர்கள் சேர்ந்து 1860 ம் ஆண்டில் இந்த தேவாலயத்தை கட்டினர்.

ஐரோப்பிய கட்டடகலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் செங்கல், சுண்ணாம்பு, முட்டை, வெல்லம் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

செட்டிஹள்ளி, சங்கரவள்ளி, மதனகுப்பம், தோட்டாகொப்புலு, கட்டிகொப்புலு ஆகிய கிராம கிறிஸ்தவ மக்களால் இந்த தேவாலயம் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆலயத்திற்கு வந்த சோதனை

பிறகு, ஆற்றுநீரை அதிக பாசனத்திற்கு பயன்படுத்தும் நோக்கில், அதில் கொருர் என்ற அணையை அரசாங்கம் கட்டி மாற்றுவழியில் நீரை திருப்பியது.

அதற்காக, மரியா நகர், அல்போன்ஸா நகர், ஜோசப் நகர் ஆகிய மூன்று கிராம மக்களும் மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

வேறு ஏதும் செய்ய இயலாத நிலையில் தேவாலயம் மட்டும் அப்படியே விடப்பட்டது.

அதனால், ஹேமாவதி ஆற்றுவெள்ளம் தேவாலயத்தை தழுவி ஓடத்துவங்கியது. அதனால்தான் ஆலய மரபுகள் மாறி வெறும் கட்டடமாக தனிமைப்பட்டது.





புதிரான வசீகர மெருகு

இந்த தேவாலயம் ஐரோப்பிய கட்டட கலை பாணியில் கட்டப்பட்டது. இது பருவமழை காலத்தில் தண்ணீரில் மூழ்குவதும் நீர் வடிந்ததும் வெளித்தோன்றுவதுமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கியதால், அதுவே ஒரு வசீகரமான சிவந்த நிறத்தை கொடுத்திருக்கிறது.

இந்த புதிரான நிற வசீகரம் எந்த பழமையான நினைவுச் சின்னத்திலும் காணப்படவில்லை.

மேலும் இது இயற்கை சூழலில் அமைந்துள்ளது. அதைச் சுற்றியுள்ள வற்றிய ஆற்றுப்படுகை மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலும் ஆங்காங்கே பச்சை புல்வெளிகளும் நீல நிறமுமாக ஒரு ரம்மியத்தை கொடுக்கிறது.

தேவாலயத்தின் எதிர்நீச்சல்

வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு பழமைதான் முதல் அழகு. அது பல தலைமுறைகளுக்கு உறுதியாக நிலைத்திருந்து, முன்னோர்களுக்கும் இன்னாளில் உள்ளோருக்கும் ஒரு பாலமாக இருப்பதுதான் முக்கியச் சிறப்பு.

அந்த வகையில், இருபது ஆண்டுகள் ஹேமாவதி ஆற்றில் எதிர்நீச்சல் போட்டும் கட்டமைப்பு குலையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரோஸரி தேவாலயம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்று சின்னத்துக்கு சமமானது என்றால் அது மிகையல்ல.







ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! Reviewed by Author on March 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.