பொருளாதார மத்திய நிலைய காணியை அடையாளப் படுத்துக: வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கடிதம்!
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்குரிய காணியை புதன்கிழமைக்கு முன்னதாக அடையாளப்படுத்தி வழங்குமாறு, மாவட்ட அரச அதிபர் வவுனியா மாவட்டத்தின் இணைத் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு 5 காணிகள் பரிந்துரை செய்யப் பட்டன என்றும், அதில் 2 காணிகளே இதற்குப் பொருத்தமானதாக உள்ளன என்றும், அவற்றில் எந்தக் காணியை பரிந்துரை செய்வது என்பது தொடர்பில் பதில் வழங்க வேண்டும் என்று அரச அதிபர் அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குரிய காணியை அடை யாளம் காண்பதில் இழுபறி ஏற்பட்டது.
ஓமந்தையிலுள்ள மாணிக்கபுரம் காணி இந்தத் திட்டத்துக்காக இனங்காணப்பட்டிருந்தது. மாணிக்கபுரம் காணி நகரிலிருந்து 9 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தமையால் மாற்றுக் காணி வழங்குமாறு கிராமிய பொருளாதார அமைச்சு கோரியிருந்தது.
இதனால் விவசாயத் திணைக்களத்தின் விதை உற்பத்தி நிலையம் உள்ள தாண்டிக்குளம் காணியை இந்தத் திட்டத்துக்கு வழங்குவதற்கு வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் ஓமந்தை மாணிக்கபுரம் காணியை வழங்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருந்தார்.
அதனால் இந்தத் திட்டத்தைத் தொடர்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது. பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய காணியை அடையாளப்படுத்தி வழங்காதுவிட்டால் திட்டம் வேறு மாகாணத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, மாவட்ட அரச அதிபர், இணைத் தலைவர்களுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இந்தத் திட்டத்துக்காக 5 இடங்களில் காணிகள் அடையாளப்பட்டிருந்தன. ஓமந்தை மாணிக்கபுரம், பம்மைமடு, ஈரப்பெரியகுளம், தாண்டிக் குளம், மன்னார் வீதியில் ஓரிடம் என்று 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் ஓமந்தை மாணிக்கபுரம் காணியையே பரிந்துரைந்திருந்தார். ஆனால், அந்தக் காணி தனியாருக்கு 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனவே, அந்தக் காணியையும் இந்தத் திட்டத்துக்குப் பெற்றுக்கொள்ள முடியாது.
இதேபோன்று பம்மைமடு, மன்னார் வீதியில் உள்ள காணிகள் என்பனவும் நகரிலிருந்து தொலைவிலேயே உள்ளன. இதனால் அவற்றைத் தெரிவு செய்ய முடியாது.
தாண்டிக்குளம் அல்லது ஈரப் பெரியகுளத்திலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
இது தொடர்பில் இணைத் தலைவர்களை நாளை புதன்கிழமைக்குள் பதில் வழங்கவேண்டும் என்று அரச அதிபர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலைய காணியை அடையாளப் படுத்துக: வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கடிதம்!
Reviewed by NEWMANNAR
on
April 26, 2016
Rating:
No comments:
Post a Comment