மிருகபலி தடை உத்தரவுக்கு இந்து மாமன்றம் பாராட்டு....
ஆலயங்களில் மிருகங்களைப் பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ் உத்தரவானது. சைவ மதத்தின் உன்னத கொள்கையையும் ஆலயத்தின் புனிதத்தையும் மேம்படுத்த உதவுமென்பது எமது நம்பிக்கை என்று அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மன்றம் விடுத்துள் செய்தியில் கூறியுள்ளதாவது,
சமுதாயத்திலுள்ள இவ்வாறான மூடக்கொள்கைகளையும், மதத்திற்கு முரணான செயல்களையும் தடுக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கும் சமய அமைப்புக்களுக்குமே உரியதாகும். இவ்வகையில் நீதிமன்றத்தின் இத்தடையுத்தரவு மிகவும் போற்றுதற்குரியது.
எனினும் சமீபத்தில் யாழ் மாவட்டத்தின் சங்கானை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான மிருகப்பலி நடைபெற்றதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ஆலயங்களில் மிருகப்பலி இடுவதை எமது சமயம் இதுவரை அங்கீகரிக்கவுமில்லை எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்போவதுமில்லை. சகல உயிரினங்களும் ஆண்டவனின் குழந்தைகளென்றும், சகல உயிரினங்களுடனும் அன்பு பாராட்ட வேண்டுமென்றே எமது சமயம் போதிக்கின்றது. அவ்வகையில் மிருகப்பலிக்கெதிரான நீதிமன்றத்தின் தடையுத்தரவைத் தொடர்ந்து இந்து சமய கலாசாரத் திணைக்களம் விரைவில் இச்சட்ட வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துச் சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
மிருகபலி தடை உத்தரவுக்கு இந்து மாமன்றம் பாராட்டு....
Reviewed by Author
on
April 04, 2016
Rating:

No comments:
Post a Comment