தாய்வான் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார் சாய் இங்-வென்....
தாய்வான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முற்போக்கு கட்சியின் சாய் இங்-வென் பதவியேற்றுள்ளார்.
சீனாவில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தாய்வான் பிரிந்து சென்று புதிய நாடாக உருவெடுத்தது.
ஆனால் தாய்வான் ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும்கூட பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்துவருகின்றன.
இந்நிலையில் சீனாவின் அண்டை நாடாக இருந்து வரும் தாய்வானில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த 59 வயதான சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார். மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலகினார்.
இந்த தேர்தலையும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக சாய் இங்-வென் பதவியேற்றார்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள தேசியக் கொடியின்முன் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தைவான் மக்கள் தங்கள் வாழ்க்கையின் நெறிமுறையாக உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க உறுதி பூண்டுள்ளனர் என்று கூறினார்.
சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க தாய்வான் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், இருநாட்டு மக்களின் நலனுக்காக பழைய வரலாறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நீண்ட காலமாக சீனாவால் அங்கீகரிக்கப்படாமல் உள்ள தைவானை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஒரு நாள் தாய்பூமியுடன் இணைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து இணைப்போம் என்றும் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.
நடைமுறையில் தாய்வான் தனி நாடாக இருந்தாலும், அதனைத் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.
தாய்வான் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார் சாய் இங்-வென்....
Reviewed by Author
on
May 21, 2016
Rating:
Reviewed by Author
on
May 21, 2016
Rating:


No comments:
Post a Comment