மட்டு.எல்லையில் சிங்கள குடியேற்றம் என்ற செய்தி பொய்: அரசாங்க அதிபர்
“மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய குடியேற்றங்கள்” என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில் உண்மைத்தன்மை இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டு.எல்லையில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவது சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான ஆக்கம் குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய குடியேற்றங்கள் என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில் உண்மைத்தன்மை இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்பட்ட தங்களது கால்நடைகள் கொல்லப்படுவதாகவும் காணாமல் போவதாகவும் கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேசசெயலாளர்கள், கிராமசேவையாளர்கள் அந்த இடத்தினை பார்வையிடுவதற்காகச் சென்றார்கள்.
அங்கு சென்றபோது சில பருவகால சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி இந்த கால்நடைகளுக்கு ஏற்படும் இடையூறை தடுப்பதற்காகவும் எதிர்வரும் 19ஆம் திகதி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களோடும் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனவே குறிப்பிட்ட செய்தி சில ஊடகவியலாளர்களின் ஊகங்களுக்கு உட்படுத்தப்பட்டு திரிவுபடுத்தப்பட்டு இனங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் மாவட்டங்களுக்கிடையேயும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த செய்திகளை வெளியிடுகையில் சமூகப்பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் சரியாக உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடுவது சிறப்பானது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
மட்டு.எல்லையில் சிங்கள குடியேற்றம் என்ற செய்தி பொய்: அரசாங்க அதிபர்
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment