அண்மைய செய்திகள்

recent
-

ஈழத் தமிழ் மக்களுக்கு கருணாநிதி என்றும் ஆதரவாம்


நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பலமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைமை கிடைக் கப்பெற்ற கலைஞர் கருணாநிதிக்கு எங்கள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

சம்பந்தரின் வாழ்த்தைக் கண்ட கலைஞர் கருணாநிதி உடனடியாகவே அதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதுடன் அக்கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு எப்போதும் தேவையில்லை. 2006-2009 காலப்பகுதியில் அவரின் ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும்.

எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்றும் உயிர் வாழ்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். இருந்தும் அதைக் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினார்.
2006-2009 காலப்பகுதியில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் ஆதரவுடனேயே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது.

அன்று கருணாநிதி நினைத்திருந்தால் மத்திய அரசுடன் கதைத்து வன்னி யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவேயில்லை.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு காலம் உணர்ந்து செய்யவேண்டிய உதவியைச் செய்யாதவர் இப்போது இலங்கைத் தமிழர்களுக்கான தனது ஆதரவு என்றும் இருக்கும் எனக் கூறியமை ஆச்சரியத்துக்குரியதுதான்.

இந்த ஆதரவு என்பது கலைஞர் கருணாநிதியின் வழமையான பழக்கத்தின் தொடர் என்று கூறிக்கொள்ளாமே தவிர மற்றும்படி அவரின் ஆழ்மனதில் இருந்து கூறப்பட்டதல்ல இது என்பது தெட்டத்தெளிவு.

எனினும் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதத்தை நம்புவதற்கு எங்களிடமும் அரசியல் தலைமை உண்டு என்பதுதான் எங்களின் அறுந்த தலைவிதி.
2008 களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தது.

வை.கோபாலசாமியின் உதவியுடன் இச்சந்திப்பு நடப்பதாக இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வை.கோபாலசாமியின் உதவியை நாடியதன் காரணமாக அந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தடைசெய்திருந்தார். தன்னை மீறி இச் சந்திப்பு நடப்பதாக நினைத்த அவரின் கர்வம் அப்படியொரு தடையை செய்தது.

இவ்வாறாக நடந்து கொண்ட கலைஞர் கருணாநிதி இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு தனது ஆதரவு என்றும் இருக்குமென்றால், அது எங்கே? எப்போது? ஏன்? என்றவாறான கேள்விகள் எழுவது நியாயமானதே.

இந்தக் கேள்விக்கான பதில், தமிழ் மக்கள் படும் துன்பத்திற்கு; அவலத்திற்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு என்றுமிருக்கும் என்பதாக அமையும்.
ஈழத் தமிழ் மக்களுக்கு கருணாநிதி என்றும் ஆதரவாம் Reviewed by NEWMANNAR on May 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.