அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் வாகனங்கள் தேவையா ? ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மழுப்பல்...
பிரதியமைச்சருக்கு 2 கோடி ரூபா, அமைச்சருக்கு 3 கோடி ரூபா என 118 கோடி ரூபா செலவில் வாகனம் கொள்வனவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நாட்டி கடன் சுமை அதிகரித்துள்ளது. வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம், வாகனமொன்றுக்கு பல கோடி ரூபாவை செலவழிக்க வேண்டுமா? என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் முறையான பதிலை முன்வைக்கவில்லை.
எனினும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து வாகனம் கொள்வனவு தொடர்பில் பல கேள்விகளை எழுப்பினர்.
கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் பதிலளித்த அமைச்சர்களான ராஜித சேனாரத்தன மற்றும் கயந்த கருணாதிலக,
அமைச்சர்கள் என்ற வகையில் அவர்களின் நாளாந்த கடமைகள் அதிகமாகும். மேலும் ஒரு நாளைக்கு பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பதற்காக வாகனங்களில் விலை குறைக்கப்படாது. வாகனங்கள் விற்கப்படும் விலை அடிப்படையிலேயே கொள்வனவு செய்யப்படுகின்றது. இதற்காக சாதாரண வாகனங்களை எம்மால் வாங்க முடியாது.
உதாரணமாக இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டுமாயின் சாதாரண வாகனங்களில் செல்வது கடினம். கொழும்பில் உள்ள ஒருவருக்கு இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறித்தப் பகுதிகளுக்கு சாதாரண வாகனங்களில் சென்று பாதையில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு நடந்து செல்ல முடியாது. அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமாயின் 'போ வீல்' வாகனங்கள் கட்டாயம் தேவை.
அமைச்சர் என்ற வகையில் ஒரு நாளில் பிரயாணத்தில் அதிக நேரத்தை செலவிடுகின்றோம். இதனால் வாகனங்கள் கூடுதலாக பாவனைக்குள்ளாகின்றன. குறிப்பாக நான்கு வருடங்களுக்கு மேல் ஒரு வாகனத்தை பாவிக்க முடியாத நிலையும் உள்ளது. எமது பாதுகாப்பு மிக முக்கியமாகும்.
எமது நாட்டிலேயே இவ்விடயமெல்லாம் ஒரு பிரச்சினையாக பேசப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமைச்சர்களுக்கு இது ஒரு விடயமே இல்லை. மக்களும் பெரிதுபடுத்துவதில்லை.
கேள்வி : வாகனங்கள் கொள்னவு செய்வதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள பணத் தொகையை குறைக்க முடியாதா? குறிப்பாக பொன்சேகாவுக்கு 7 கோடி ரூபா செலவிலும் மஹிந்த சமரசிங்கவுக்கு 5 கோடி ரூபா செலவிலும் வஜிர அபேகுணவர்தன 9 கோடி ரூபாவுக்கும் வாகனம் கொள்வனவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று இன்னும் சிலருக்கும் பல கோடி ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக விலையில் வாகனங்கள் கொள்வனவு செய்ய வேண்டுமா? இந்த வாகன கொள்வனவுக்காக தீர்மானிக்கப்பட்டுள்ள பணத்தொகையை குறைத்து அப்பணத்தில் மக்களுக்கு உதவ முடியும் அல்லவா?
பதில்: ஒரு சிலரே அதிக விலையில் வாகன கொள்வனவு செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும்
கேள்வி: காணி அமைச்சராக இருந்த எம்.எஸ்.டி குணவர்தன உயிரிழந்த பிறகு அவருக்கு வழங்கப்பட்டிருந்த நவீன ரக வாகனத்தை ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டது. இந்த வாகனம் இல்லாமல் மேலும் நான்கு வாகனங்களை கொள்வனவு செய்ய போவதாக தெரிவிக்கப்படுகின்றது?
பதில்: நீங்கள் வாகனங்கள் பற்றி கதைக்கின்றீர்கள். இன்றைய ஆட்சியில் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். வெள்ளை வேன் கலாசாரம் இல்லை. நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகின்றது. முன்னர் ஜனாதிபதியே நிதி அமைச்சராக காணப்பட்டார். கடந்த ஆட்சியில் இவ்வாறு நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை. ஆனால் இப்போது நல்லாட்சி என்பதனாலேயே இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்றன.
கேள்வி : மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கூடுதலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைச்சர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதே?
பதில்: நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு காலத்தில் மோதலில் ஈடுபட்டு எதிரிகளாக காணப்பட்ட கட்சிகளாகும். ஆனால் இன்று இரு கட்சிகளும் இணைந்து நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் மக்களுக்கும் நாட்டுக்கும் நிறைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தருணத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக 30 அமைச்சர்களுக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா கோரி, நேற்று பாராளுமன்றத்தில் குறை நிரப்பு மதிப்பீட்டு செலவு தொகை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் 30 அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வெளியிடப்படுள்ளது.
- பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே - ரூபாய் 7 கோடி.
- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேரவர்தனவிற்கு இரண்டு வாகனங்களும் பிரதியமைச்சர் நிமால் லன்சாவுக்கு ஒரு வாகனமும் - 9 கோடியே 90 இலட்சம்.
- தொலை தொடர்பு மற்றும் டிஜிடல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் பிரதியமைச்சர் தாராநத் பஸ்நாயக்க – 9 கோடியே 10 இலட்சம்.
- திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு இரண்டு வாகனங்கள் - ரூபாய் 5 கோடி
- சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு இரண்டு வாகனங்கள் - ரூபாய் 3 கோடியே 50 இலட்சம்.
- நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் பிரதியரமைச்சர் சுமேதா ஜி.ஜயசேன -ரூபாய் 7 கோடி.
- பிரதி அமைச்சர் லஷந்த அழகியவன்னவிற்கு 5 கோடியே 60 இலட்சம்.
- சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவிற்கு 5 கோடியே 60 இலட்சம்.
- அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த – 6 கோடியே 30 இலட்சம்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஸ்ஸ நாணயக்காரவிற்கு – ரூபாய் 2 கோடியே 80 இலட்சம்.
- மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டியவிற்கு - ரூபாய் 3 கோடியே 50 இலட்சம்
- மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் - 3 கோடியே 50 இலட்சம்.
- நீர் பாசன இராஜஙக அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கு - 3 கோடியே 50 இலட்சம்.
- நீதி அமைச்சர் விஜயதஸா ராஜபக்ஷ மற்றும் பிரதி அமைச்சர் துஷ்மன் மித்ரபால – 7 கோடி.
அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் வாகனங்கள் தேவையா ? ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மழுப்பல்...
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment