நிகழும் சம்பவங்களைக் கண்டு நெஞ்சம் வெடித்துப் போகிறது
போரில் தோற்றுப்போன தமிழினம் ஒற்றுமையாக இருந்து மீண்டு எழ வேண்டிய நேரம் இது.
இருந்தும் எங்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனது மட்டுமன்றி, சமூக இணக்கப்பாடும் கலாசாரப் பேணுகையும் வேரறுந்து போவதுதான் மிகப்பெரிய கொடுமை.
அதிலும் குறிப்பாக பாடசாலைகளில் இடம்பெறும் சம்பவங்களை அறிந்து நெஞ்சம் வெடித்துப் போகிறது.
ஏன்தான் இப்படி நடக்கிறது என்று எண்ணும் போது எம் தமிழினத்துக்கு என்ன நடந்தாயிற்று என்று ஏங்கித் தவிப்பதில் தவறில்லை.
ஒரு காலத்தில் பண்பாட்டு விழுமியங்களின் உயர் பேணுகை கொண்ட தமிழ் மக்கள் இன்று கலாசாரச் சீரழிவுகளில் கந்தறுந்து போகின்ற பரிதாபம் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்வது கட்டாயமானதாகும்.
இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் போர்க்கால சூழ்நிலை எங்கள் இனத்தை மட்டுமல்ல; எங்கள் இனத்தின் பண்பாடு, கலாசாரம், விழுமியம் என்ற அடிப்படைகளையும் அறுத்துக் கொட்டியமையை அறிய முடியும்.
ஒருபுறத்தில் போதைப் பொருட்களைப் பரப்பி எங்கள் அருமந்த பிள்ளைகளை நாசமறுக்க எடுக்கப்பட்ட சதித்திட்டத்தில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் நாம் தத்தளிக்கின்றோம்.
இந்நேரத்தில் விரசமான சூழமைவு ஒன்று எங்களை அறியாமலேயே எங்கள் சமூகத்தில் விதையிட் டுள்ளது.
இதன் காரணமாக விரசமான செயற்பாடுகள் மலிந்து போகும் அளவில் எங்கள் நிலைமை உள்ளமை வேதனைக்குரியது.
குறிப்பாக ஒழுக்கத்தின் விளை நிலங்களாக இருக்க வேண்டிய பாடசாலைகள் சிலவற்றில் ஆசிரியர் - மாணவர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் நெஞ்சை இறுக்கிக் கொள்கின்றன.
இப்படியும் நடக்குமா? என்ற கேள்வி சர்வசாதாரணம் என்ற பதிலைத் தந்து விடுமோ என்ற பயம் பீடிக்கும் அளவில் சம்பவங்கள் நீண்டு செல்கின்றன.
ஆசிரியர்கள் - மாணவர் உறவு என்பது தெய்வீகமானது. அந்தத் தெய்வீகம் களங்கப்படுமாக இருந்தால் பாடசாலை என்ற கட்டமைப்பு ஆடிப்போய் விடும்.
ஆகவே, ஆசிரியர் - மாணவர் என்ற தெய்வீகமான உறவை பேணுவதற்கு அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
பாடசாலைகள் பண்பாட்டு விழுமியங்களைப் போதிக்கின்ற ஆலயங்கள் என்பதால், ஒவ்வொரு பாடசாலைகளிலும் விழுமியக் கல்வியும், ஆன்மிக விதைப்பும் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
இவை இணைந்து நடக்குமாயின் தவறுகள் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படும். இதற்கு மேலாக ஒழுக்கம் உயர்வைத் தரும் என்ற உன்னதமான வள்ளுவர் வாக்கு மனங்களில் பதிவாகும் வண்ணம் ஒழுக்கவியலை கட்டாயமான பாடமாகக் கற்றலில் சேர்ப்பது சமகாலத்திலும் எதிர்காலத்திலும் நிறைந்த பாதுகாப்பைத் தரும்.
நிகழும் சம்பவங்களைக் கண்டு நெஞ்சம் வெடித்துப் போகிறது
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:


No comments:
Post a Comment