வடக்கு மீதான சீனாவின் திடீர் பாசம்!
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வதும், அங்கு சந்திப்புகளை நிகழ்த்துவதும் வழக்கமானதொரு விடயமாக இருந்தாலும், கடந்த வாரம் சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை வழக்கமானதொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது.
சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சீனத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் லி செங்லின் உள்ளிட்ட தமது அதிகாரிகளுடன், கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
அவர் அங்கு மூன்று முக்கிய தரப்பினரைச் சந்தித்துப் பேசினார். வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட குரே, யா்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்.
சீனத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுதான் என்று கூற முடியாது. இதற்கு முன்னரும் சீனத் தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களின் முன்னைய பயணத்திற்கும் இப்போதைய பயணத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. சீனாவின் அபிவிருத்தி அல்லது வேறு திட்டங்களின் ஆரம்ப அல்லது நிறைவு விழாக்கள் அல்லது அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட பயணங்களாகத்தான் கடந்த காலங்களில் சீனத் தூதுவர்களின் பயணங்கள் அமைந்திருந்தன.
பொதுவாக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் அவ்வாறான நிகழ்ச்சி நிரலை மாத்திரம் கொண்டிருப்பதில்லை. அதற்கும் அப்பால் வடக்கில் உள்ள கள நிலைமைகள், மக்களின் கருத்துக்கள், அரச மற்றும் சிவில் சமூகத்தின் கருத்துக்கள், வடக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவது வழமை.
சீனத் தூதுவர்கள் அவ்வாறான நோக்கில் முன்னர் பயணங்களை மேற்கொண்டதில்லை.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை என்பது சீனாவின் பொதுவான கொள்கை என்பதால் மட்டுமே இதுவரையில் சீனத் தூதுவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனக் கருத முடியாது.
சீனாவைப் பொறுத்தவரையில் முன்னர் வடக்கின் மீது அதிகம் கவனத்தைச் செலுத்தவில்லை. தென்பகுதியின் மீதே அதன் கவனம் ஒன்று குவிந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. திடீரென வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்ட சீனத் தூதுவர், முதலமைச்சர் மற்றும் ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
வடக்கின் அபிவிருத்தி, தேவைகள் மற்றும் நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்திருக்கிறார். வடக்கின் அபிவிருத்திக்கு சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் பக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அசாதாரணமானதொன்றாகவே தெரிகிறது. இலங்கையுடன் நீண்டகால உறவினைக் கொண்டிருக்கும் சீனாவைப் பொறுத்தவரையில் போர்க்காலத்தில் முற்றுமுழுதாகவே அது அரசாங்கத்தின் பக்கமே நின்றது.
திபெத் விடயத்தை முன்னிறுத்தி ஒரே சீனா என்பதை அந்த நாடு எவ்வாறு மன்னிறுத்தி வருகிறதோ அதுபோலத்தான் இலங்கை தொடர்பாகவும் ஒரே இலங்கை என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாகவே சீனா இருந்து வந்தது. தமிழர்கள் பெரியளவில் அழிக்கப்பட்ட போதும், தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்பட்ட போதும் சீனாவின் பக்கத்தில் இருந்து துளியளவு எதிர்ப்பும் வரவில்லை.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்கொண்ட போது அதனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அரங்கில் பெரும் இராஜதந்திரப் போராட்டங்களை நடத்திய நாடுதான் சீனா.
இதுவரை தமிழரின் பக்கம் கரிசனை காட்டியிராத சீனா திடீரென வடக்கின் மீதும் தமிழர் அரசியல் தரப்புகள் மீதும் காட்டும் பாசம் கேள்விகளை எழுப்ப வைக்காமல் இல்லை.
சீனத் தூதுவர் கடந்த வாரம் வடக்கிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னரும், தமிழர் தரப்புடனான ஒரு சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது. சீனத் தூதுவரின் இல்லத்தில் கடந்த மாதம் 25ம் திகதி நடந்த அந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சீனத்தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மைக் காலத்தில் நடத்திய முதலாவது சந்திப்பு இதுதான். இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் அல்லது மாவை சேனாதிராசா போன்றவர்கள் அதில் பங்கேற்றிருக்க முடியாது.
எனவே இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலையில் இடம்பற்ற சந்திப்பாகவே கருத வேண்டும். இந்தச் சந்திப்பு தொர்பான விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதன் பின்னர் தான் சீனத் தூதுவர் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
சீனத் தூதுவரைச் சந்தித்த பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்ட போது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிந்தே சீனத் தூதுவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருப்பார் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதாவது அரசாங்கத்தின் அனுசரணையுடன்தான் சீனத் தூதுவர் வடக்கின் மீதான கரிசனையை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் என்பது அவரது கருத்து. எனினும் தமிழர்களின் தனித்துவத்தை சீனா புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக அவர் கூறியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது சீனத் தூதுவர் அக்கறை காட்டிய ஒரு விடயம் முக்கியமானது.
தமிழர் தரப்புக்கும் சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் அரசியல் தலைமைக்கும் இருக்கின்ற அரசியல் முரண்பாடுகள் மற்றும் அதனைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்து சீனத் தூதுவர் ஆர்வம் காட்டியிருந்தார்.
இது சீனாவின் முன்னைய நிலைக்கு முரணான விடயம். அதாவது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு எதிரானது.
முரண்பாடுகளைக் களைவது என்ற ரீதியில் சீனா எத்தகைய பங்களிப்பை வழங்க முன்வந்தாலும் அது மூன்றாவது தரப்பினது தலையீடாகவே இருக்கும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்தகைய தலையீடுகளை சீனா எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது.
அதேவேளை, வடமாகாண முதலமைச்சரை சந்தித்த பின்னர் சீனத் தூதுவர் இதுபற்றி எதையும் குறிப்பிடவில்லை. எனினும் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையுடன் வாழ அனைவரும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இதன் அர்த்தம் ஒரே இலங்கை என்ற கோட்பாடு தான்.
அதேவேளை, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்து பங்களிக்கும் என்றும், இந்த அபிவிருத்தி திட்டங்களை நாட்டின் ஒரு பகுதிக்குள் மட்டுப்படுத்தாமல் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
வடக்கிற்கும் உதவிகளை வழங்கவிருப்பதாகவும், இதுபற்றி தொடர்ந்து பேச்சுக்களை சீனா முன்னெடுக்கும் என்றும் சீனத் தூதுவர் தெரிவித்திருந்தார்.
இதுவரையில் சீனாவின் கவனம் தென்பகுதியின் மீது இருந்தநிலையில் இப்போது வடக்கின் மீது திரும்பியிருப்பது ஆச்சரியமானது. சற்று திரும்பிப் பார்க்க வைக்கக் கூடியது.
வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவே இதுவரை பெரியளவிலான திட்டங்களை முன்னடுத்து வந்திருக்கிறது. இப்போது சீனாவும் அதில் கால்வைக்க முனையும் போது இந்தியா அதனை எவ்வாறு அணுகப் போகிறது என்று தெரியவில்லை.
இந்தியாவை மனதில் கொண்டு தனது பூகோள அரசியல் நலன்களை அடைவதற்காக வடக்கின் மீது சீனா கவனம் செலுத்துகிறதா அல்லது அதற்கு வுறேதும் நோக்கங்கள் உள்ளதா என்பது போகப்போகத் தான் தெரியவரும்.
எவ்வாறாயினும் இலங்கையில் தமது முதலீடுகள், திட்டங்கள் அனைத்துமே பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டதே என்று சீனா கூறி வந்திருக்கிறது.
வடக்கின் மீதான சீனாவின் இப்போதைய கரிசனைகளும் அந்த வரையறைகளுக்குள் தான் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
தமிழர் விவகாரத்தை வைத்துத் தான் அமெரிக்கா இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிகளைத் தேடியிருந்தது என்பதை மனதில் நிறுத்திப் பார்க்கும் போது தமிழர்கள் மீதான சீனாவின் திடீர் பாசத்தின் பின்னால் ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்காது என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
வடக்கு மீதான சீனாவின் திடீர் பாசம்!
Reviewed by Author
on
June 20, 2016
Rating:

No comments:
Post a Comment