கனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி....
ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர்கள் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் மற்றும் பேட்ரிக் பிரௌன் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார்.
அதேவேளை ஈழம் சாவடியை அமைத்து அதற்காக கடுமையாக உழைக்கும் பிராம்டன் தமிழ் ஒன்றியத்திற்கும் தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் தனது வாழ்த்தில், ஈழம்சாவடி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பல்கலாச்சார சமூகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வலுச்சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 11 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைவது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
ஈழம் சாவடி யூலை; வெள்ளி 8ஆம் நாள் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 9ஆம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 10ஆம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது. ஈழம் சாவடிக்கு முதலில் வரும் பார்வையாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் இலவசமாக வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.
உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வெள்ளி மற்றும் சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகா ரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் ஞாயிறு மாலை இறுதி நிகழ்வாக் பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதில் சுப்பர் சிங்கர் புகழ் நிரூசன் உட்பட பல ஈழக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Pkwy East இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர். வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளி மாலை 6 மணிக்கு உத்தியோகபூர்வ ஆரம்பத்தின் போது பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவாய் சவாடி, பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய வாசடி, லத்தின் அமெரிக்கா சாவடி போன்றவை அந்நாட்டை சென்று தரிசிக்கின்ற அனுபவத்தை தரவல்லவை எனவும் சொல்லப்படுகிறது. கரபிறாம் பல்கலாச்சார விழாவில் சந்திப்போம் என உரிமையுடன் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர்.
கனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி....
Reviewed by Author
on
July 06, 2016
Rating:

No comments:
Post a Comment