நீடிக்கும் பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை! வலுக்கும் வடக்கு முதல்வரின் எதிர்ப்பு....
மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை செயற்படுத்த முடியாது. பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமையவேண்டும் என்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை.
2010ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் சர்ச்சை நீடித்து வருகின்றது.
தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று வாக்கெடுப்பை மக்கள் பிரதிநிதிகள் இடையே நடத்தினார்.
இதில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமையப் பெறவேண்டும் என்று அதிகமானவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் அமைச்சரவை அலுவலகத்தால் கடந்த வாரம் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
வடக மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கெடுத்த ஜூன் மாதம் 28ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை அழைத்து, அந்தக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பதை முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
வவுனியா மாவட்ட அரச அதிபர் இதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். வவுனியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இணைத்தலைவர்கள் நான்கு பேரினதும் நேரத்தைக் கோரி மாவட்ட அரச அதிபர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், குழுக்களின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த மாத இறுதியில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
மற்றொரு இணைத்தலைவரான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாகப் பதில் வழங்கவில்லை.
சில தினங்களுக்கு முன்னரே தனது கடிதத்தை அனுப்பிவைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டிய அவசியமில்லை.
2010ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது என்று எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்துமாறு அதில் தெரிவித்துள்ளார்.
நீடிக்கும் பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை! வலுக்கும் வடக்கு முதல்வரின் எதிர்ப்பு....
Reviewed by Author
on
July 22, 2016
Rating:
Reviewed by Author
on
July 22, 2016
Rating:


No comments:
Post a Comment