’முதல் முறை மரணத்தை பார்க்கிறேன்’..! -நா.முத்துக்குமார்.....
1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... ‘இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’ நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
ஆழம் அறி!
எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...
உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். ‘இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா’ என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் ‘உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்’ என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!
கோபம் கற்றுணர்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், ‘இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!’ மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.
உன் திசை உற்றுணர்!
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, ‘இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே’ என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.
அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!’ அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.
எரிக்க எரிக்க எழுந்து வா!
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
‘சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்’ என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், ‘இறக்க வேண்டும் நான்’ என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
ஆறாவது முறையாக நா.முத்துக்குமார் ஆவீர்களா கவிஞரே..!
’முதல் முறை மரணத்தை பார்க்கிறேன்’..! -நா.முத்துக்குமார்.....
 Reviewed by Author
        on 
        
August 15, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 15, 2016
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
August 15, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 15, 2016
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment