காவிரி வன்முறை போராட்டத்தால் எவ்வளவு கோடி இழப்பு?
தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விநாடியில் இருந்து, கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதனால் பெங்களூரு நகரம் உட்பட முக்கிய பகுதிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. போக்குவரத்து அடியோடு முடங்கியதால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களால், இதுவரை ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அசோச்செம் எனப்படும் இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்ற பெருமையைப் பெற்ற பெங்களூரு மீது கறை படிந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நீடிக்கும் போராட்டத்தால் வணிக நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள், தமிழர்களுக்கு சொந்தமான வாகனங்களையும், கடைகளும் சேதப்படுத்தி வருகின்றனர்.
ஓன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிக்கார்ட், அமேசான் உள்ளிட்டவையும் இயங்கவில்லை.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அசோச்செம் எனப்படும் இந்திய வர்த்தக கூட்டமைப்பு, காவிரி விவகாரத்தில நீடிக்கும் வன்முறையால், நாட்டின் தகவல்தொழில்நுட்ப நகரம் என்ற பெங்களூருவின் பெருமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்கள் செயல்படாதது, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாதது மற்றும் பொதுச்சொத்துகள் சேதப்பட்டதன்மூலம் பெங்களூருவில் மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய வர்த்தக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் பெங்களூரு மீது கறைபடிந்திருப்பதாகவும், இதனால் தொழில்துறையினர் திகைப்படைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் ஆதாயம் பெற சில தவறான நபர்கள் அல்லது அமைப்புகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள வர்த்தக கூட்டமைப்பு, முதலீட்டிற்கு உகந்த மாநிலம் என்ற கர்நாடகா மீதான நன்மதிப்புககும், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
காவிரி பிரச்னையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இயல்புநிலை திரும்புவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
காவிரி வன்முறை போராட்டத்தால் எவ்வளவு கோடி இழப்பு?
Reviewed by Author
on
September 14, 2016
Rating:

No comments:
Post a Comment