அண்மைய செய்திகள்

recent
-

தங்களை காப்பாற்ற முடியாத தமிழகத் தமிழர்கள்! இலங்கைத் தமிழர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்!

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களுடன் இணைந்து மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் மத்தியில்
காணப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் , மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களால் தமிழ்நாட்டின் அண்டை மாநிலத்திலுள்ள தமிழர்களைக் கூட காப்பாற்றமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் , மற்றும் அரச கரும மொழிகள்அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களிற்கான இருநாள் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் (19) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது உரையின் முக்கிய விடையங்கள் வருமாறு,
அதிகாரப்பகிர்வு என்பது சிங்களவர்களிடமுள்ள அதிகாரங்களை நாம் புடுங்குவதல்ல. புடுங்கிப் பெற்றுக்கொள்ளும் அந்தளவிற்கு நாம் பிச்சைக்காரர்களும் இல்லை. மத்தியிலே கொழும்பிலே குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மகாணங்களிற்கு பகிருமாறே கேட்கின்றோம்.
சமஷ்டி என்ற சொல் சிங்களவர்கள் மத்தியில் கெட்ட சொல்லாக உள்ளது. ஆனால் சமஷ்டி என்ற சொல்லாடலை முதலில் பேசியவர்கள் அவர்களே. ஏன் முதல் அரசியல் படுகொலையாக இருக்கட்டும். அரசிற்கு எதிராக முதல் கிளர்ச்சியாக இருக்கட்டும் எல்லாம் அவர்களில் இருந்தே தோற்றம்பெற்றது. தாம் ஒடுக்கப்படும்போது பொறுத்துப் பொறுத்து பின்னர்தான் தமிழர்கள் தமது உரிமைகளிற்காக போராடத் தொடங்கினார்கள்.
இந்த நாட்டில் புதிய யுகத்தினை ஆரம்பித்துள்ளோம். கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கவோ, ஊடக மாநாடுகளை நடாத்தவோ முடியாமல் இருந்தது.
கடந்த காலங்களில் ஜனநாயகத்தினை வெளிப்படுத்த முடியாத நிலமை காணப்பட்டது. தற்போது, துப்பாக்கிகள், குண்டுகள், வன்முறைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். கலந்துரையாடல்களின் மூலம் நாட்டில் சகவாழ்வினை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இனங்கள் மத்தியில் ஒற்றுமையினையும் ஐக்கியத்தினையும் ஏற்படுத்த மக்கள் மத்தியில் சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். சமத்துவத்தினால் ஐக்கியத்தினை ஏற்படுத்த முனைகின்றோம். சமத்துவம் இல்லாவிடின், ஐக்கியத்தினை ஏற்படுத்த முடியாது.
சமத்துவமில்லாமல் வரும் ஐக்கியம் ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே உள்ள ஐக்கியம். அநாகரீக தர்மபால சிங்களவர்களே எழுந்து நில்லுங்கள் என கூறிய கூற்றினை மாற்றி இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள் என்ற கூற்றினை அடையும் நிலைக்கு வந்துள்ளோம். அதற்குள் மூன்று இனத்தவர்களும் உள்ளடக்கப்பட்டு இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள் என்று கூறும் போது முழு இனத்தவர்களும் எழுந்து நிற்பார்கள்.
இந்த அரசாங்த்தில் எல்லாம் நடைபெற்று விட்டன என்று கூறமுடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்று சொல்லவரவில்லை. அப்படி சொல்வதற்கு பொய்யனும் அல்ல. முட்டாளும் அல்ல. அப்படி சொல்ல முடியாது.
ஆனால், அரசியல் தீர்வினை நோக்கிய நகர்வு இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை தட்டிக் கேட்கின்றோம்.
வன்முறைகளை ஒதுக்கி விட்டு கலந்துரையாடல்களுக்கு இடம்கொடுக்க வேண்டுமென நினைக்கின்றேன். அவ்வாறு நினைக்காவிடின் அடுத்த தலைமுறையினர் வன்முறைகளை கையில் எடுத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கின்றது. நாட்டில் இன்னொரு வன்முறை இடம்பெற்றுவிடக் கூடாது. மீண்டும் ஒரு யுத்தம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் வந்துவிடக்கூடாது என நினைக்கின்றோம்.
இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக்கூடாதாயின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடி சமத்துவத்தினை ஏற்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும். இனப் பிரச்சினைக்கு தீர்வு அதிகார பகிர்வின் மூலம் தான் என்பது திட்டவட்டமாக நடைபெறவேண்டியிருக்கின்றது.
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் நோக்கிய இரண்டு அச்சங்கள் இருக்கின்றன. தனிநாடு கோரிவிடுவார்களோ மற்றும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி ஆயுதப் போராட்டத்தினை மேற்கொண்டு விடுவார்களோ என்ற நிலைப்பாடு இருக்கின்றன.
அதேபோன்று தமிழ் மக்களுக்கும் சிங்கள் மக்கள் மீது இரண்டு அச்சங்கள் இருக்கின்றன. பன்மைத் தன்மை கொண்ட நாடாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இரண்டாம்தர பிரஜைகளாக கருதுவார்களாக என்ற அச்சம் நிலவுகின்றது.
தேசிய இனப் பிரச்சினைக்கான பாதை ஒன்றில் தற்போது பயணிக்கின்றோம். தந்தை செல்வாவிற்கு ஒரு பாதை இருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ஒரு பாதை இருக்கின்றது. அதிகார பகிர்வு என்ற இலக்கினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். முழுமையாக தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் முழுமையாக நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.
தங்களை காப்பாற்ற முடியாத தமிழகத் தமிழர்கள்! இலங்கைத் தமிழர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்! Reviewed by NEWMANNAR on September 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.