அண்மைய செய்திகள்

recent
-

“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி 1% வேர்க்கும் உழைப்பு 99%என உலகுக்கு எடுத்துக்காட்டிய மாமனிதன் யார் தெரியுமா?


வீட்டில் நான்காவது குழந்தையான அந்த சிறுவனுக்கு பிறக்கும்போதே தலை மிகப் பெரியதாக இருந்தது. அதிக காலம் வாழமாட்டான் என்று வைத்தியர்கள் கூறினார்கள், சிறிய வயதிலேயே காது கேட்கும் திறன் குறைந்தது.

பாடசாலைக்குச் செல்லாமல் பல வருடங்கள் வீட்டிலேயே இருந்தவன் தான் அந்த மாபெரும் விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன்.

அவனை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது ஆனால் அவனது வாழ்க்கையை தெரிந்துக் கொண்டவர்கள் எவர்?

இந்த சம்பவம் ஒருநாள் எடிசனின் வீட்டில் இடம் பெற்றது.

கோழி முட்டைமேல் உட்கார்ந்து அடை காத்துக் கொண்டிருந்தது, எடிசன் கேட்டான் ‘‘அம்மா, கோழி ஏன் முட்டை மேல் உட்கார்ந்திருக்கிறது?” என அதற்கு அவனது அம்மா கூறிய பதில் என்ன தெரியுமா?

வெப்பமாக இருந்தால் தான் முட்டை கோழிக் குஞ்சாக மாறும் மகனே என தெரிவித்துள்ளார்.

பின்னர் எடிசனை காணவில்லை, ஒரு மூலையில் முட்டையின் மேல் உட்கார்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தான். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள் தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.

எடிசன் முட்டாள் அல்ல, அவனுக்குள் அறிவு தூங்கிக் கொண்டிருக்கிறது என அவனை அவனது அம்மா பாடசாலைக் அனுப்பி வைத்துள்ளார். அம்மாவுக்கு புரிந்தது என்னவோ உலகத்துக்குத் தெரியவில்லை.

வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் அவனுடைய பெரிய அளவிலன தலையையும், காது கேளாமையையும் தினமும் கேலி செய்தார்கள்.

சில நாட்களுக்கு பின்னர், வகுப்பு ஆசிரியர் எடிசனைப் பார்த்து ‘‘உனக்கு மந்த புத்தி, உன் மூளையில் ஒன்றுமே இல்லை” என்று அவனைத் திட்டினார்.

இதனால் அவனது தாய் அவனை பாடசாலை அனுப்புவதை இடைநிறுத்திவிட்டு வீட்டில் அவரே கல்வி கற்றுக் கொடுத்துள்ளார்.

ஒன்பது வயதிலேயே இரசாயனவியல் சோதனைகள் பற்றிப் படித்துக் கொண்டு அந்த பரிசோதனைகளை வீட்டில் செய்து பார்க்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிட்டான் எடிசன்.

எடிசனுக்குப் பதின்மூன்று வயதாயிற்று, அப்பாவின் வருமானம் போதவில்லை வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எடிசன் வீடு வீடாகப்போய் விற்று வந்தான்.

அப்போது, அவன் ஊருக்கு புகையிரதம் வந்திருந்தது. புகையிரதத்தில் நாளிதழ்கள், வேர்க்கடலை, பழங்கள், ஆகியவற்றை விற்கும் வேலையில் சேர்ந்தான்.

எடிசன் சாரதியிடம் அனுமதி வாங்கி புகையிரத பெட்டியிலேயே ஒரு சோதனைச்சாலை அமைத்துக் கொண்டான்.

ஒரு நாள், புகையிரதத்தில் ஏறி இறங்கிய போது, பொஸ்பரஸ் என்னும் இரசாயனப் பொருள் கீழே விழுந்துள்ளது.

பொஸ்பரஸ் காற்றுப் பட்டவுடன் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக புகையிரத பெட்டி தீப்பிடித்தது. எனவே புகையிரத நிர்வாகம் எடிசனின் பசோதனைச்சாலையை மூடினார்கள்.

ஒரு நாள் எடிசன் ஓடும் புகையிரதத்தில் ஏற முயற்சித்தான் அவன் காதைப் பிடித்து ஒருவர் அவனை உள்ளே இழுத்தார்.

காதில் “கடக்” என ஒரு சத்தம், எடிசனின் கேட்கும் திறன் இன்னும் குறைந்தது.

மனதில் தாழ்வு மனப்பான்மை வந்தது. பிறரைச் சந்திப்பதைத் தவிர்த்தான். நூலகம் ஒன்றிற்குச் சென்றான்.

கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தான். “நான் புத்தகங்கள் படிக்கவில்லை மொத்த நூலகத்தையும் படித்து முடித்தேன்.” என்று பின்னர் கூறியுள்ளார் எடிசன்.

எடிசன் புகையிரத பயணிகளைக் கூர்ந்து கவனிப்பான், ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டு வருவார்கள் உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் நாளிதழ் எதுவும் இல்லை என்று அவன் மூளை சொன்னது.

புகையிரத நிர்வாகத்தின் அனுமதி வாங்கினான். புகையிரத பெட்டியிலேயே சிறிய அச்சிடம் இயந்திரம் போடுவதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.

பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தான். பத்திரிகை நிருபர், ஆசிரியர், அச்சிடுபவர், விற்பவர் எல்லாமே ஒருவர் தான் அந்த 13 வயது சிறுவன், வரிக்கு வரி பிழைகள், விரைவில் அந்த பத்திரிக்கைக்கும் மூடு விழா இடம் பெற்றது.

1860 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் யுத்தம் தொடங்கியது. செய்திகளைத் தெரிந்துகொள்ள மக்களிடையே பெரும் பரபரப்பு.

இந்த நிலையில் பணம் சம்பாதிக்கும் முறை எடிசனுக்குத் தெரிந்தது. பத்திரிக்கையை விரைவாக விற்று முடித்த எடிசன் வர்த்தகத்தை புரிந்துகொண்டுடான்.

இரவு நேரங்களில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்தது.

அதனை ஏன் தானியக்க மயமாக்க கூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார்.

பின்னர் புகையிரத நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித் தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார்.

உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் அவர் தீர்வு காணத் தொடங்கினார்.

“உலகத்துக்கு எந்தப் பொருள் தேவைப்படுகிறது என்று தெரிந்துகொள்வேன் அடுத்ததாக, அந்தப் பொருளைக் கண்டுபிடிப்பேன்.” என கூறினான் அந்த சிறுவன்.

ஒரு புகையிரத கண்காணிப்பாளரின் உதவியால், எடிசனுக்கு தந்தி அனுப்பும் தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டான்.

துறைமுகத்தில் தந்தி அனுப்புநர் வேலை கிடைத்தது. வேலைப்பளு மிகக் குறைவு. ஓய்வு நேரங்களைப் பரிசோதனைகள் செய்வதில் செலவிட்டான்.

எடிசனுக்கு வயது 21 ஆனது. ‘‘நான் 50 வருடங்கள் வாழலாம், அதற்குள் செய்யவேண்டியது அதிகம் இருக்கிறது.”என்று எண்ணிக் கொள்வான்.

முதலில் தந்தி இயந்திரத்தை கண்டுபிடித்தான்.

பின்னர் தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரத்தை கண்டுப்பிடித்தான். பின்னர் அது நட்டத்தில் முடிந்தது.

தங்கத்தின் விலையைத் தினமும் கண்காணிக்கும் இயந்திரம் கண்டுபிடித்தார். இதை அடிப்படையாக வைத்து சொந்தக் நிறுவனம் ஆரம்பித்தார்.

வெற்றிமேல் வெற்றி வந்து சேர்ந்தது. சொந்த இடம் வாங்கி, பரிசோதனைச்சாலை தொடங்கினார். தினமும் 18 மணிநேர ஆராய்ச்சி மேற்கொள்வான்.

தோல்விகள் கண்டு துவளாமல் விடாமுயற்சியோடு தொடரும் அணுகு முறை எடிசனின் தனி அடையாளமான ஒன்று.

ஒலிபெருக்கி இயந்திரக் கண்டுபிடிப்பில் ஜோர்ஜ் என்பவர் எடிசனுக்கு உதவியாளராக இருந்தார்.

2 வருடங்களில் அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டன.

“உங்கள் பணத்தை வீணாக்கிவிட்டேன், வேலையை விட்டுவிடுகிறேன்” என்றார் ஜோர்ஜ்.

“கடவுள் ஒவ்வொரு சோதனைக்கும் ஒரு தீர்வை வைத்திருப்பார். நாம் கண்டுபிடிக்காவிட்டால், வேறொருவர் தீர்வைக் காண்பார் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.” என எடிசன் பதிலளித்துள்ளார். மின்விளக்குத் தயாரிப்பில் எடிசன் ஈடுபட்டிருந்தார்.

ஒளிவிடும் இழை எந்தப் பொருளால் செய்யவேண்டும் என்று தெரிந்துக் கொள்ள 2,000 வகை இழைகளில் சோதனை செய்தார் உங்களில் யாருக்காவது முடியுமா? அவ்வாறு 2000 முறை செய்துப்பார்ப்பதற்கு.

ஒலிக்கான சாதனத்தை உருவாக்கிய பிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின் விளக்குகளைப் பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார்.

நிச்சயம் முடியாது என்று அடித்துக் கூறினர் சமகால விஞ்ஞானிகள். ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவே பட்டது.

அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர்.

எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள இழை பல்வேறு கனிமங்களை கொண்டு

கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன். அதன் மூலம் மின் விளக்குகளைப் பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார்.

அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து.

ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சுவது தான் எடிசனின் நோக்கம்.

அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்து போனது. ஆனால் எடிசனின் தன்னம்பிக்கயோ ஒடியவில்லை. பலமுறை முயன்று கடைசியாக அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின்கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.

தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1300 சரித்திரத்தில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்ட கூட நெருங்க முடியாத எண்ணிக்கை அது. அதனால் தான் அவரை கண்டு பிடிப்புகளின் தந்தை என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.

எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த எடிசனின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒரு முறை கூறினார் இவ்வாறு:

“வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்”

அந்த உயரிய நல்ல நோக்கத்தின் அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த முறை நீங்கள் மின்விளக்கு விசையை அழுத்தும்போது எடிசனுக்கு நன்றி சொல்லுங்கள்! ஏனெனில் நீங்கள் அந்த மின் விசையை அழுத்தும்போது உங்களை சுற்றியுள்ள இருளை போக்குவதும் ஒளியை தருவதும் அன்று எடிசன் சிந்திய வியர்வைதான்.

“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி 1% வேர்க்கும் உழைப்பு 99%என உலகுக்கு எடுத்துக்காட்டிய மாமனிதன் யார் தெரியுமா? Reviewed by Author on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.