வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை முடிக்கப்படவில்லை: சுகாதார அமைச்சர்...
ஒப்பந்தக்காரர்களுக்காக வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, இவ்வாண்டுக்கான நிதியை இதுவரை முடிக்க முடியாத நிலை உள்ளதாக வடமாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சுகாதார அமைச்சில் அதிகளவான நிதி செலவிடப்பட்டதாக தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் இவ்வருட நிதி செலவீடு எந்த நிலையில் உள்ளது எனக் கேட்ட போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஒப்பீட்டளவில் நிதிச் செலவீடு குறைவாகவே உள்ளது.
கடந்த வருடம் கிட்டத்தட்ட 98 வீதமான நிதியை செலவிட்டிருந்தோம். எமது சுகாதார அமைச்சை பொறுத்தவரையில் மூலதன நிதி என்பது பெரும்பாலும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் மூலதன நிதியாகவே இருக்கின்றது.
அதன் பிரகாரம் எமது வடக்கு மாகாணத்தில் பல கட்டிட வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த வருடம் கட்டிடங்களை அமைப்பதில் எமக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் பாரியளவு நிதி செலவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எமக்கு தேவையான கட்டிடங்கள் எங்கு அமையவேண்டும் என்பது தொடர்பாக எமது சேவை வழங்குனராக உள்ள மாகாண கட்டிடங்கள் திணைக்களத்திற்கே நாங்கள் எமது ஒப்பந்தங்களை கையாள்வதற்கான முழு அதிகாரங்களையும் வழங்கியுள்ளோம்.
இந்த மாகாண கட்டிடங்கள் திணைக்களம் இவ்வேலைத்திட்டங்களை நிறைவுசெய்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
அதாவது பொறியிலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட ஆட்கள் பற்றாக்குறை காணபப்டுகின்றது.
அதிலும் இந்த வருடம் கல்வி அமைச்சு ‘அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்தினூடாக பல மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது.
இதற்கும் இதே ஒப்பந்தக்காரர்களே இந்த வேலைகளையும் எடுத்துள்ளனர். ஆகவே இந்த ஒப்பந்தக்காரர்கள் ஒரே நேரத்தில் பல ஒப்பந்தங்களை செய்யக்கூடிய ஆளுமை உள்ளவர்களா என்பது கேள்விக்குரியே.
அதனால் எமது கட்டிடங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் மிக மிக மந்த கதியிலேயே இடம்பெறுகின்றது.
இது தொடர்பாக பல கூட்டங்களை மாகாண மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் அடுத்தடுத்து நடத்தி வந்தாலும் சில ஒப்பந்தக்காரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக கட்டிடங்கள் திணைக்களம் கூறுகின்றது.
ஆகவே நாங்கள் கட்டிடங்கள் திணைக்களத்துடன் கூட்டங்களை நடத்தி இந்த வேலைத்திட்டங்களை எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக நிறைவு செய்யுமாறு கேட்டுள்ளோம்.
இதனடிப்படையில் அதிகளாவன கட்டிடங்கள் 70 தொடக்கம் 75 வீதமாக காட்டினாலும் நிதி செலவீடுகள் தொடர்பில் அவர்கள் குறைவாகவே காட்டுகின்றார்கள்.
ஏனெனில் இந்த ஒப்பந்தக்காரர்கள் ஒரே நேரத்தில் பல ஒப்பந்தங்களை எடுத்துள்ளமையினால் அவர்கள் தாம் செய்து முடித்த வேலைக்கான பற்றுச்சீட்டுகளை கூட கட்டிடங்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதில் தாமதமாக உள்ளது.
இதனால் வேலை முடிந்தாலும் நிதி செலவிடப்படவில்லை என்ற நிலை உள்ளது.
அந்த வகையில் எனது சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மாவட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசமாக உள்ளது. வேலை முடிவுற்ற நிலை எல்லா மாவட்டத்திலும் சராசரியாக 75 வீதத்திற்கும் அதிகமாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
மேலும், நிதி விடயத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வரை 48 வீதமான நிதியே ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாகாண பொறியிலாளரின் கருத்துப்படி இன்னும் பல மில்லியனுக்கான பற்றுச்சீட்டுகள் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவை சரிபார்க்கும் வேலைகள் இடம்பெற்று வருவதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை முடிக்கப்படவில்லை: சுகாதார அமைச்சர்...
Reviewed by Author
on
November 14, 2016
Rating:

No comments:
Post a Comment