கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு வடக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு....
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு வடக்கில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் தமது உணர்வுப்பூர்வமான பூரண ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 21 நாட் களாக அப்பகுதி மக்கள் தொடர் கவ னயீர்ப்பு போராட்டத்தை விமானப் படைத்தளத்துக்குமுன்னால், வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்ற னர்.
இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முல்லைத்தீவு கிளையினரும் முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, தண்ணீர்ஊற்று, ஹிஜிராபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் பரிபாலனசபையினரும் நேற்று மாலை கேப்பாப்பிலவு மக்களின் போராட்டக்களத்துக்கு நேரடியாக வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டதோடு இரவு உணவினையும் அளித்திருந்தனர்.
இதேவேளை குறித்த மக்களின் நில மீட்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் வடக்கில் உள்ள பாடசாலைகளில் ஒரு மணி நேர கவனயீர்ப்பு மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்களாலும் சமூக நலன் விரும்பிகளாலும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மாணவர்கள் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
அதில் யாழ்.ஒஸ்மானியா கல்லூரி முஸ்லிம் மாணவர்கள் தமது உணர்வுபூர்வமான ஆதரவினை பாடசாலைக்கு வெளியே வந்து வீதியில் நின்று தெரிவித்திருந்தனர்.
இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் இருந்து முஸ்லிம் சமூகத்தினருடைய ஆதரவு கேப்பாப்புலவு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு வடக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு....
Reviewed by Author
on
February 22, 2017
Rating:

No comments:
Post a Comment