நினைவேந்தலை குழப்பக் கூடாது! ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு....
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பை முள்ளிவாய்க்கால் துக்க நினைவு வாரமாக அனுஷ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவுக்கு வருவதனைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி வருகை தந்தால் ஜனாதிபதியை வெளியேறுமாறு கூறி முல்லைத்தீவில் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான தியாகராஜா, கிளிநொச்சி மாவட்ட உறுப்பினரான பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைந்து சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நேற்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியளவில் நடத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நினைவு தினமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருடம் தோறும் மேமாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை உலகத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து உலக தமிழர்களின் துக்க நாளாக இருக்கும் இந்த நினைவு வாரத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு மாகாண சபை இந்த முறையும் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளான எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் அரங்கேற்றப்பட்ட செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் நினைவஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.
13ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலும், 14ஆம் திகதி ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலும், அதே நாளன்று நவாலி சென் பீற்றர் தேவா லயத்தில் நடைபெற்ற படுகொலையை நினைவு கூரும் வகையிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
15ஆம் திகதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினி படுகொலை நினைவு தூபியிலும், 16ஆம் திகதி வவுனியாவிலும், கிளிநொச்சிலும் 17ஆம் திகதி மன்னாரிலும், இறுதி நாளான 18ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த நினைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல் கட்சி பிரதி நிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் அரசியல் வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன நினைவு தின நிகழ்வை ஒன்றாக நின்று நடத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஒட்டுமொத்த தமிழர்களும் துக்கதினமாக அனுஷ்டிக்கும் இந்த நினைவு நாளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்படுகொலையை அரங்கேற்றும் போது அதற்கு ஆதரவாக இருந்த இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக வருகை தரவுள்ளார். அவர் உடனடியாக தனது வருகையை நிறுத்த வேண்டும்.
அவ்வாறு நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராக முல்லைத்தீவு மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். அன்றைய தினம் தமிழர்களின் துக்கதினம் என மைத்திரிக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் வருவதற்கு காரணம் எங்கள் நினைவுகளை சிதைக்கவே என சிவாஜிலிங்கம், பசுபதிப்பிள்ளை மற்றும் தியாகராஜா ஆகியோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நினைவேந்தலை குழப்பக் கூடாது! ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு....
Reviewed by Author
on
May 10, 2017
Rating:
Reviewed by Author
on
May 10, 2017
Rating:


No comments:
Post a Comment