தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்...
தமிழனுக்கு தமிழனே பகையாகிவிட்ட நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கவே செய்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் பாவமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தனர்.வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களில் சிலர், இப்போது அரசுடனும் பேரினவாத சக்திகளுடனும் இணைந்து போவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றனர்.
இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற நிலைமை உணரப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையில் நடந்த அதிரடிச் சம்பவங்கள் தமிழ் மக்களை கதிகலங்கச் செய்ததுடன் தமிழர்களுக்கு ஆட்சி என்பது பொருத்தமற்றது என்றவாறான கதைகள் தென்பகுதியின் விமர்சனமாக மாறியும் உள்ளது.
விடுதலைப் புலிகள் என்ற மண் மீட்புப் போராட்ட அமைப்பு உருவாகிய இத்தமிழ் மண்ணில், விடுதலைப் புலிகள் எவ்வாறாக நிர்வாகம் நடத்தினர் என்பதை இந்த உலகமே நன்கறியும்.
தவிர, விடுதலை புலிகள் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன எதிரிகளையும் திகைக்க வைத்தது.
இவ்வாறாக ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழினம் இன்று மாகாண சபையைக் கூட நடத்த முடியாமல் தத்தளிக்கிறது என்ற அளவில் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்களின் இயலாமையன்று.
மாறாக பேரினவாத சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு குழுவாக இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே செய்கின்ற திருகுதாளங்கள்.
இதன் ஓர் உச்சக்கட்டமே வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமாகும்.
இவற்றைச் செய்கின்றவர்கள் இதன் பின் விளைவு பற்றி இம்மியும் சிந்திக்கவில்லை.
அத்தகைய சிந்தனை அவர்களுக்குத் தேவையுமற்றது. பேரினவாதத்துடன் சேர்ந்து எத்தகைய நிலைமையைத் தோற்றுவிக்க வேண்டுமோ அத்தகைய நிலைமையைச் செய்து முடிப்பதே அவர்களின் இலக்காக உள்ளது.
எனினும் இவற்றை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.
வடக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் எப்படி உரையாற்றுகிறார்கள் என மக்கள் விழிப்பாக அவதானிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
தமது அரசியல் நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விழிப்படைந்துள்ளதால்,
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக அமையும் என நம்ப முடியும்.
அதேவேளை சபை நடவடிக்கையை வேண்டுமென்றே குழப்ப யார் நினைத்தாலும் மக்கள் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்பது சர்வநிச்சயம்.
நன்றி- வலம்புரி-
தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்...
Reviewed by Author
on
June 24, 2017
Rating:

No comments:
Post a Comment