சவால்களை நிரூபிக்க சத்தியலிங்கம், டெனீஸ்வரன் முன்வரட்டும்! கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் மூத்த தலைவர் சம்பந்தரின் உறுதிமொழிக்கும் மதிப்பளித்து அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஊழல் விசாரணைகளில் கலந்து கொள்ளவேண்டுமென பிரபல சமுதாய நல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அழைப்புவிடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நிலைத்தகவலில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஊழல் விசாரணைக்குழு முன் ஆஜராக மாட்டோம் என்றும் விசாரணைக்குழு அமைப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்றும் அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் தெரிவித்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்து இருப்பது வட மாகாணத்தில் ஊழலற்ற நல்லாட்சி நடக்க வேண்டும் என்று கருதும் தமிழ் மக்களின் மனங்களில் மீண்டும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் பதவிகளை வகிக்கும் போது அந்தப் பதவிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டால் அதை விசாரிக்கும் நீதியான உரிமை முதலமைச்சருக்கு உள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்ட நான்கு அமைச்சர்களும் கடந்த முறை விசாரணைகளை எதிர்கொண்டார்கள் என்பதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியும் இருந்தார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு இரா. சம்பந்தன் குற்றம் இன்னமும் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தி வைப்பதற்கே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் விசாரணை முடியும் வரை அமைச்சர்கள் விசாரணையில் இடையூறு செய்யாமல் பார்ப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதன் மூலமாக ஊழலுக்கு எதிரான விசாரணைகளை எந்த வகையிலும் தடுக்கப்போவதில்லை என்ற உறுதி மொழியை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் கட்சியின் மூத்த தலைவரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்றவும் தமிழர்களின் ஒற்றுமையை பேணவும் விசாரணைக் குழுவை எதிர்கொண்டு தங்களுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் ஏற்கெனவே ஊடகங்களுக்கு வழங்கிய “ஊழல் நிரூபிக்கப்பட்டால் தற்கொலை செய்வேன்”, “அமைச்சர் பதவியை துறந்து விட்டு நீதியை நிலைநாட்டுவதற்கு தயார்” மற்றும் “நிதிமோசடி நிரூபிக்கப்பட்டால் அதைபோல் இருமடங்கு நிதியை திருப்பி அளிப்பேன்” என்று தெரிவித்து இருந்தமைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.
அதை விடுத்து ஊழலுக்கு அப்பாற்பட்ட கண்ணியமான தந்தை செல்வாவினால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தற்போதைய உறுப்பினர்கள் முதலமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணைகளை தடுத்து சூழ்ச்சியில் ஈடுபட்டால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழப்பதோடு அடுத்த தேர்தலில் அதன் பலனை அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் எச்சரித்துமுள்ளார்.
சவால்களை நிரூபிக்க சத்தியலிங்கம், டெனீஸ்வரன் முன்வரட்டும்! கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
Reviewed by NEWMANNAR
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment