எழுத்து மூலமான உத்தரவை சம்பந்தன் வழங்க வேண்டும் - விக்கி
வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சர், சுகாதார அமைச்சர் இருவரும் அவர்கள் மீதான விசாரணை நட வடிக்கைகளில் தலையிடமாட்டார்கள் என இரா. சம்பந்தன் உத்தரவாதமளிப்பின், அந்த அமைச்சர்களுக்கு எதி ரான எனது முடிவை பரிசீலிக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தரிடம் கோரியுள்ள அவ்வாறான உத்தரவாதத்தினை ஏனைய 3 பங்காளி கட்சிகளும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நேற்றைய தினம் பதில் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் எடுத்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என தெரிவித்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்திருந்தனர்.
அதாவது விவசாயம், கல்வி அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கையில் எதிர்ப்பு இல்லை எனவும் ஏனைய மீன்பிடி, சுகாதார அமைச்சர்களும் விசாரணை குழுவினால் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒரு மாத விடுமுறையில் இருக்கச் சொல்வது தவறு என எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரின் முடிவை மாற்றுமாறு கோரி வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் குறித்த செயற்பாட்டினால் வடக்கு முழுவதும் குழம்பிய நிலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சுமுகமாக்குவதற்கு பல தரப்பினரும் முதலமைச்சருடன் சமரசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், குறித்த இரு அமைச்சர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் முதலமைச்சர் தான் ஒரு பதில் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அறிவித்திருந்தார்.
அதாவது இரு அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள் முடியும் வரை அந்த விசாரணை நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தலையிட மாட்டார்கள் என்ற எழுத்து மூல உத்தரவாதத்தினை வழங்கினால் அவர்களுக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலித்து அவர்களை தொடர்ந்தும் பதவியில் இருக்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் முதலமைச்சரின் குறித்த கோரிக்கைக்கு அந்த இரு அமைச்சர்களும் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வட மாகாண முதலமைச்சருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
குறித்த கடிதம் தொடர்பாக பரிசீலித்து முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் அவரது வாசஸ் தலத்தில் வைத்து கலந்துரையாடியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கையில்,
இன்றைய நிலைமை தொடர்பில் சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்கென, இரு அமைச்சர்கள் தொடர்பிலும் இரா. சம்பந்தர் எனக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்து ரையாடி இருந்தேன். குறித்த கடிதத்துக்கு பதில் கடிதம் தயாரித்துள்ளோம்.
அக்கடிதத்துக்கு சம்பந்தனிடம் இருந்து வரும் பதிலில் தான் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரிய வரும்.
இரு அமைச்சர்கள் விடயம் தொடர்பாக மாற்று நடவடிக்கை எடுப்பதற்கு எழுத்து மூல உத்தரவாதங்களை கோரியிருந்தேன். ஆனால் அவர்கள் உத்தரவாதம் தருவதற்கு பின்நிற்கிறார்கள்.
குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தருக்கு விளக்கமாக குறிப்பிட்டுள்ளேன். அவருடைய பதிலில்தான் அடுத்த கட்ட முடிவு தங்கியுள்ளது. இரு அமைச்சர்கள் தொடர்பாக அவர் உத்தரவாதம் தந்தால் ஏற்றுக் கொள்ள முடி யும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எழுத்து மூலமான உத்தரவை சம்பந்தன் வழங்க வேண்டும் - விக்கி
Reviewed by Author
on
June 18, 2017
Rating:

No comments:
Post a Comment