வட கொரியாவுக்கு நிதி ஆதரவு: சீன வங்கிக்கு தடை
வட கொரிய பணத்தில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சீன வங்கி ஒன்றின் மீது தடைகளை விதிக்கும் அமெரிக்க முடிவுக்கு சீனா கோபமாக பதிலளித்திருக்கிறது.
ஒத்துழைப்புக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க அமெரிக்கா "தவறான செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் வலியுறுத்திருக்கிறார்.
இந்த நடவடிக்கையையும். சீன கப்பல் நிறுவனம் மற்றும் இரண்டு சீன பிரஜைகள் மீது தடைகளையும் அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது.
REUTERS
வட கொரியாவின் ஆயுத திட்டங்களுக்கு கிடைக்கும் நிதிகளை தடுப்பதற்கான நோக்கத்தோடு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
"நாங்கள் இந்த நிதியை பின்தொடர்வோம். அதனை தடுப்போம் என்று அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மெனுசின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வட கொரியா தொடர்பான பிரச்சனையில் சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு பதிலடியாக இது அமையவில்லை என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரானது அல்ல. இது ஒரு வங்கியையும், சீனாவிலுள்ள தனிநபர்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்று அவர் கூறியுள்ளார்.
வட கொரியாவுக்கு எதிராக பல சுற்று தடைகளை ஐக்கிய நாடுகள் அவை ஏற்கெனவே விதித்துள்ளது. ஆனால், வட கொரியா மீது பொருளாதார பாதிப்புக்களை அதிக அளவு ஏற்படுத்துகின்ற நாடாக பரந்த அளவில் சீனா பார்க்கப்படுகிறது.
JIM WATSON/AFP/GETTY IMAGES
வட கொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதற்கு மத்தியில், சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. சீனாவின் நடவடிக்கைகள் பயன்தரவில்லை என்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
டான்தொங் வங்கி அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை தற்போதைய தடை சுட்டிக்காட்டுகிறது.
"வட கொரிய நிதி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது" மற்றும் "வட கொரியாவின் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஆயுத தயாரிப்பு மற்றும் பலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் பரிமாற்றங்களுக்கு" டான்தொங் வங்கி உதவியுள்ளது என்று அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
வட கொரிய நிறுவனங்களுக்கு உதவுகின்ற முன்னணி நிறுவனங்களை உருவாக்கிய இரண்டு சீன பிரஜைகளும், வட கொரியாவுக்கு சொகுசு பொருட்களை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கப்பல் நிறுவனமான டாலியன் குளோபல் யுனிட்டி கப்பல் போக்குவரத்து நிறுவனமும் இந்த தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் அமெரிக்கா அதிக தடைகளை விதிக்கும் என்று மெனுசின் குறிப்பிட்டுள்ளார்.
JIM WATSON/AFP/GETTY IMAGES
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபரின் ஃபுளோரிடா ரிசாட்டில் நடைபெற்ற அதிபர் டிரம்புக்கும் சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கும் இடையிலான நட்பார்ந்ததாக தோன்றிய கூட்டத்தின் "முக்கிய மனநிலைக்கு எதிராக" அமைந்துவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
தைவானுக்கு 1.42 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை விற்கப்போவதை அமெரிக்கா அறிவித்திருக்கையில் இந்த தடைகளும் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தில் தைவானுக்கு ஆயுத விற்பளை இது முதல்முறையாகும்.
சுயாட்சி நடத்தி வரும் தீவான தைவானை தன்னுடைய பெருநிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா எண்ணுவதால், தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பது சீனாவை கோபப்படுத்துவதாக அமையும்.
பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாக அதிபர் டிரம்போடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜியே-இன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- BBC - Tamil-
வட கொரியாவுக்கு நிதி ஆதரவு: சீன வங்கிக்கு தடை
Reviewed by Author
on
July 01, 2017
Rating:

No comments:
Post a Comment