உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் இந்திய பிரதமர்....
உலகின் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படும் ஜெருசலேம் நகரின் கிங் தாவீத் ஹொட்டலில் பிரதமர் மோடியை இஸ்ரேல் அரசு தங்க வைத்துள்ளது.
இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார்.
இதன்மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். இஸ்ரேலில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, பழைய ஜெருசலேம் நகரின் கிங் தாவீத் ஹொட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 3 வாரங்களுக்கு முன்னர் தங்கியிருந்த அதே அறை இந்திய பிரதமர் மோடிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த கிங் தாவீத் ஹொட்டல் உலகின் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஹொட்டலின் 110 அறைகளிலும் தங்கியிருந்த விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டதுடன், ஹொட்டல் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மோடி தங்கியிருக்கும் பிரசிடென்சியல் சூட் உள்பட ஹொட்டலின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் துப்பாக்கி தோட்டாக்கள் மட்டுமல்ல ராக்கெட் தாக்குதலால் கூட சேதமடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவ.
அதேபோல், வெடிகுண்டு தாக்குதல் மற்றும் நிலநடுக்கம் போன்ற காரணங்களால் ஹொட்டல் முழுமையும் தகர்க்கப்பட்டாலும், மோடி தங்கியிருக்கும் அறைக்கு எந்த சேதமும் ஏற்படாது என கூறப்படுகிறது.
அந்த அறை ஒரு பாதுகாப்பு பெட்டகம் போல செயல்பட்டு உள்ளே இருக்கும் விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கும். அந்த அறைகள் முழுவதும் கான்க்ரீட் மற்றும் எஃகு கலவையால் உருவாக்கப்பட்டவை.
இந்திய பிரதமர் மோடி மற்றும் அவருடன் இஸ்ரேல் சென்றுள்ள அதிகாரிகள் மட்டுமே அந்த ஹொட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற அறைகள் அனைத்தும் காலியாகவே உள்ளன. ஹொட்டலின் அறைகளில் வைக்கப்படும் மலர் கொத்துகள், சமையலறையில் சமைக்கப்படும் உணவுகள் என அனைத்துமே இந்திய அதிகாரிகளின் ரசனைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.
ஹொட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இஸ்ரேலின் ஷின் பெட் எனப்படும் பாதுகாப்பு நிறுவனத்தின் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஹொட்டலில் ஒருநாள் இரவு தங்க வாடகை மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.06 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகின் மிகவும் பலம்வாய்ந்த உளவுத் துறை நிறுவனமாகக் கருதப்படும் இஸ்ரேலின் மொசாத் (Mossad) அதிகாரிகளும் மோடியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனால்ட் டிரம்ப் தவிர இஸ்ரேலுக்கு இந்த நூற்றாண்டில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா போன்றோரும் கிங் தாவீத் ஹொட்டலிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் இந்திய பிரதமர்....
Reviewed by Author
on
July 06, 2017
Rating:
Reviewed by Author
on
July 06, 2017
Rating:


No comments:
Post a Comment