தமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்....
தமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக துரைமுருகன், திருநாவுக்கரசர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை:
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசிடமிருந்து தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள், நிதியை பெறுவதற்கும், மாநில அரசின் இயலாமையை வெளிப்படுத்தி விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்க அழுத்தம் கொடுக்கவும் போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அதன்படி, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் முதல் முயற்சியாக வருகிற 16-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காஞ்சீபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் தி.மு.க. முதன்மைச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகனும், தஞ்சையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசரும் பங்கேற்கிறார்கள்.
இதேபோல திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசனும், திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், கோவையில் நானும் (கே.பி.ராமலிங்கம்), சேலத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்துவும், திருவண்ணாமலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனும் பங்கேற்கின்றனர்.
மற்ற மாவட்டங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் தொடங்கி வைத்தும், மாவட்ட அளவிலான தலைவர்கள் முன்னின்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் அமைதியாக அறவழியில் நடைபெறும் தொடக்க போராட்டமாகும். கோரிக்கை முழக்கங்களை தவிர்த்து, வேறு எந்தவிதமான அநாகரீகமான அசம்பாவிதமான செயல்களுக்கும் இடம் தராத வகையில் போராட்டம் நடைபெற்று, தமிழக மக்களின் ஆதரவை விவசாய சமுதாயத்திற்கு பெற்றிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்....
Reviewed by Author
on
August 15, 2017
Rating:
Reviewed by Author
on
August 15, 2017
Rating:


No comments:
Post a Comment