நாங்கள் கூலியாட்கள் கிடையாது! மைத்திரி, ரணிலை கடுமையாக சாடிய விஜயகலா.....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிப்பதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் தங்களது மாவட்டங்களை அபிவிருத்தி செய்துகொண்டு எங்களைக் கூலி ஆட்களை போன்று பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், "ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறாமையினால் பாதிக்கப்படுவது நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அதிகாரிகளோ கிடையாது.
மாறாக மக்களே பாதிக்கப்படுகின்றனர். ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒழுங்காக இடம்பெறாமையினால் ஒதுக்கப்படுகின்ற நிதி திரும்பி செல்கின்றது. எங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி தென்பகுதிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
14 மாதங்களுக்குப் பின்னர் மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. இவ்வாறு தொடர்ந்து சென்றால் இந்த கூட்டத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வந்து நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.
இந்த பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டவர்கள். அத்துடன், கடந்த அரசாங்கத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிப்பதுடன், இருவரும் தங்களது மாவட்டங்களை அபிவிருத்தி செய்துகொண்டு எங்களைக் கூலி ஆட்களை போன்று பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
யாழ். மாவட்டத்திலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தேசியப் பட்டியல் ஊடாகவும், ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இங்கிருந்து தெரிவு செய்யப்படுபவர்களின் கருத்துக்களைக் கட்டாயம் கேட்கவேண்டும்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் சர்வாதிகாரம் செலுத்துவார் என்றால், நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கூலியாட்கள் கிடையாது! மைத்திரி, ரணிலை கடுமையாக சாடிய விஜயகலா.....
Reviewed by Author
on
August 03, 2017
Rating:
Reviewed by Author
on
August 03, 2017
Rating:


No comments:
Post a Comment