தமிழ் மக்களின் உண்மையான தலைவன் பிரபாகரன்! இனவாத தேரரின் பெருமிதம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உண்மையான வீரன். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். மஹிந்த அரசு போரின் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் அமுலாகவில்லை
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை என தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் இந்த கருத்தினை வெளியிட்டார். எந்த அரசியல் கொள்கையில் இருந்தாலும் நாட்டு மக்கள் மஹிந்தவுக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும். இலங்கையின் வாழ்நாள் அரசனாக மஹிந்த இருக்க வேண்டியவர்.
அது நடைபெறவில்லை. அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள் சரியான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சிங்கள மக்களுக்கு மஹிந்த வீரர் போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை.விடுதலைப் புலிகளை போரின் மூலம் தோல்வியடையச் செய்தாலும் அவர்களால் சமூகமயமாக்கியுள்ள பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை தோற்கடிக்க முடியவில்லை.
உண்மையான விடுதலைப் புலிகள் வடக்கில் இல்லை. வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்கள் சொல்வதையே பிரபாகரன் இங்கு மேற்கொண்டார். வடக்கில் போரின் மூலம் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடசாலைகள் அமைக்கப்பட்டன. தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு அன்று அரசிடம் எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. என்னதான் அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் மக்களின் உள்ளத்தை மாற்றுவது இலகுவான விடயமல்ல.
தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு நந்திக்கடலில் பிரபாகரனுக்காக நினைவுத்தூபி அமைப்பதும் பிரச்சினை இல்லை போர் வெற்றி விழாக்களை கொண்டாட வேண்டும். நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு அந்த மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உண்மையான தலைவன் பிரபாகரன்! இனவாத தேரரின் பெருமிதம்.
Reviewed by Author
on
September 21, 2017
Rating:
Reviewed by Author
on
September 21, 2017
Rating:


No comments:
Post a Comment