அண்மைய செய்திகள்

recent
-

வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

மறைந்த வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் 107-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்திய வானியல்-இயற்பியலாளர் ஆவார். சி. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் 1910-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர் சந்திரசேகர். இவர் இந்தியா பிரிட்டிஸ் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது லாகூரில் பிறந்தவர். லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது. பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928-ல் அவரது சித்தப்பாவான சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

1928-ல், ஆர்னால்ட் சம்மர்ஃபெல்ட் இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.

அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரை குறித்து சொற்பொழிவாற்றினார். அதன்பின் அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், 19ஆவது வயதில், இளங்கலை மாணவராக இருக்கும்போதே மேலும் இரு கட்டுரைகள் பதிப்பாயின.

1930-ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். மேல்படிப்பை முடித்த பின்னர் 1937-ம் ஆண்டிலிருந்து 1995-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகன் ஆனார்.

இவர் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தார். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 21-8-1995 அன்று தனது 85-வது வயதில் மரணம் அடைந்த சுப்பிரமணியன் சந்திரசேகரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.

வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள் Reviewed by Author on October 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.