மாவீரர்களின் கனவினை தாங்கிய பல்கலைக்கழக சமூகம் உணர்த்தும் செய்தி என்ன
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, வடக்கு, கிழக்கில் மிகப் பெரும் எழுச்சியாக மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று அத்தனை பேரும், மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆளுகையிருந்த போது எப்படி தமிழீழ மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோ அதேபோன்றதொரு நினைவு வந்து சென்றதாக இன்றைய தினம் பலர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த வாரம் முழுவதும் இளைஞர்களால் சிரமதானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்கான தயார்ப்படுத்தல் ஏற்பாடாகியிருந்தது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவாக அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் தங்கள் இதயத்தில் புதைந்து போயிருந்த தாகத்தை, வெடித்து மேல் எழும்பிய உணர்வை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமான மாவீரர் நாள் நடத்தப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அங்கு கூடியிருந்த பல்கலைக்கழக சமூகத்தினர் தேச விடுதலைக்காக ஆஃதியாகிப் போன மாவீரர்களின் நினைவாக செயல்பட்ட விதம் மெய்சிலிர்க்க வைத்ததாக சமூக வலைத்தளத்தில் பலர் பதிவுகளை இட்டிருந்தனர்.
குறிப்பாக, இம்முறை மாணவர்கள் மட்டுமல்லாது, விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என்று அத்தனை பேரும் உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாளிலும் ஏராளமான மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள்.
தேச விடுதலையை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த மாவீரர்களின் கனவு இன்னமும் இளைய தலைமுறையினரின் இதயத்தில் வேரோடிப் போயிருக்கிறது என்பதை 2017ம் ஆண்டு மாவீரர் நாள் நினைவுபடுத்தியிருக்கிறது.
காலப் பெருவெளியில், எதையும் தடுத்து அணைபோட்டுவிட முடியாது என்பதற்கு இந்தாண்டு மாவீரர் நாள் எடுத்துக்காட்டியிருக்கிறது.
நேற்றைய தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் இன்றைய மாவீரர் நாள் போன்றன சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மட்டுமல்ல, கொள்கையிலிருந்து விலகிச் செல்ல நினைக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் நிறையவே செய்திகளைச் சொல்லி நிற்கின்றன.
மக்கள் இன்னமும் தாயக விடுதலையின் தாகத்தோடு தான் இருக்கின்றார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் போதும்.
மாவீரர்களின் கனவினை தாங்கிய பல்கலைக்கழக சமூகம் உணர்த்தும் செய்தி என்ன
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment