தேயிலை விற்பனைக்காக புற்றுநோய் தடுப்பை கைவிட்ட மைத்திரி அரசு!
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்துவதற்கு, நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தேயிலைக்குத் தடை விதிப்பதற்கு, ரஷ்யா எடுத்த முடிவின் பின்னணியிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலைத் தொகுதியில், வண்டொன்று காணப்பட்டது எனத் தெரிவித்தே, இலங்கைத் தேயிலைக்குத் தடை விதிக்கும் முடிவை, ரஷ்யா எடுத்திருந்தது.
ஆனால், 2024ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கை விதித்த தடையின் பின்னணியிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. பொதுமக்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பானது என்ற அடிப்படையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், ரஷ்யாவின் தேயிலைத் தடை என்ற முடிவின் பின்னணியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தேயிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கமளித்ததோடு, அஸ்பெட்டாஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அதற்கான காரணமாக இருக்கலாமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை, காலவரையறையற்று இடைநிறுத்தி வைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால், 1987ஆம் ஆண்டு முதல், நீல நிற அஸ்பெட்டாஸ், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்று அடையாளங்காணப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது, வெள்ளை அஸ்பெட்டாஸ் உட்பட அனைத்து வகை அஸ்பெட்டாஸ்களும், புற்றுநோயை ஏற்படுத்துவன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கல்நார் அல்லது அஸ்பெட்டாஸ் என அழைக்கப்படும் இந்தப் பொருட்கள், இயற்கையாகக் கிடைக்கும் 6 வகையான சிலிக்கேட் கனியங்களால் ஆனவையாகும். அவற்றின் மெல்லிய இழைத்தன்மை காரணமாக, பல நூற்றாண்டுகளாக அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெப்பம், தீ, மின்சாரம் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை இவை கொண்டிருந்தாலும், இவற்றினால் ஏற்படக்கூடிய உடல்ரீதியான ஆபத்துகள் தொடர்பாக, 20ஆம் நூற்றாண்டு முதலேயே கவனம் திரும்பியதோடு, பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள், இதைத் தடைசெய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேயிலை விற்பனைக்காக புற்றுநோய் தடுப்பை கைவிட்ட மைத்திரி அரசு!
Reviewed by Author
on
December 21, 2017
Rating:

No comments:
Post a Comment