சீனக் கடலில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மூழ்கியது: 32 பேர் உயிரிழப்பு என அறிவிப்பு -
கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் தற்போது மூழ்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,36,000 டன் அளவிலான இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பல், ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி கடந்த ஜனவரி 6ஆம் திகதியன்று விபத்துக்குள்ளானது.
எண்ணெய் கப்பலில் பணியாற்றிய 32 பேரும் உயிரிழந்து விட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கப்பலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க ஒருவாரகாலமாக போராடியும் எவ்வித பலனும் கிட்டவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே "திடீரென வேகமாக எரிந்த" சான்சி கப்பல் மதிய வேளையில் மூழ்கிப் போனதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிலவி வந்த மோசமான காலநிலையில், சுமார் 13 கப்பல்கள் மற்றும் இரானிய கமாண்டோ பிரிவு ஒன்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன.
கப்பலில் யாரும் உயிரோடு இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என இரானியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மொஹமத் ரஸ்தட் தெரிவித்தார். ஏற்கனவே கப்பலில் பணியாற்றிய இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இரான் நாட்டு எண்ணெயை தென் கொரியாவிற்கு கொண்டு வந்த சான்சி கப்பல், அமெரிக்காவில் இருந்து தானியங்கள் கொண்டு வந்த ஹாங்காங் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
ஹாங்காங் கப்பலில் பணியாற்றிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனக் கடலில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மூழ்கியது: 32 பேர் உயிரிழப்பு என அறிவிப்பு -
Reviewed by Author
on
January 15, 2018
Rating:
Reviewed by Author
on
January 15, 2018
Rating:


No comments:
Post a Comment