பலூன் திரைவிமர்சனம்....
ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இதுநாள் வரை லவ்வர் பாய் கேரக்டர்களில் மட்டுமே நடித்துவந்த ஜெய் தற்போது முதல்முறையாக ஹாரர் கதையை கையிலெடுத்துள்ளார்.
கதைக்களம்:
துணை இயக்குனராக இருந்து பின்னர் தன் முதல் படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார் ஜெய், அஞ்சலியையும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஜெய் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா என கூறுகிறார்.
ஊட்டியில் உள்ள ஒரு பேய் வீடு பற்றி கேள்விப்பட்ட ஜெய் அதை பற்றி படம் எடுக்கலாம் என நினைத்து, அந்த வீட்டை பற்றி ஆராய்ச்சி செய்ய மனைவியோடு ஊட்டி கிளம்புகிறார். அவருக்கு துணையாக யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் கூட்டி செல்கிறார்.
அங்கு சென்று பேய் வீடு பற்றி விசாரிக்க துவங்குகிறார். பின்னர் சில நாட்களில் ஜெய் தங்கியுள்ள வீட்டுக்குள்ளேயே அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கின்றன.
அங்கு பேயாக இருப்பது யார்?, அவர்கள் பின்னணி என்ன? அவர்களிடம் இருந்து தப்பி ஜெய் தன் கதையை எழுதி முடித்து படமாக்கினாரா என்பதை கூறுகிறது மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கதையே இல்லாமல் வெறும் பேயை நம்பி படம் எடுக்கமுடியுமா என்றால் அது முடியாதுதான். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சினிஷ் அப்படி ஒரு முயற்சியை தான் செய்துள்ளார். பேய் படம் எடுப்பது எப்படி என்பதை கதைக்கருவாக கொண்டு ஸ்கிரிப்டு எழுதியுள்ளார். இருப்பினும் படத்தில் காமெடியிலும், கவுண்டரிலும் கவனம் செலுத்தியிருந்த அளவுக்கு, பயமுறுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தால் படம் ’சூப்பர்’ என கூறும் படி இருந்திருக்கும்.
மெதுவாக நகரும் முதல் பாதி படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் ஜாதி அரசியல் போன்ற ஒரு சிலவற்றிற்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்.
இதுவரை லவ்வர் பாயாகவே நடித்துவந்த ஜெய்க்கு இதுதான் முதல் முழுநீள ஹாரர் படம். ஆனால் அவரின் நடிப்புக்கு தீணி போடும் அளவுக்கு படத்தின் கதைக்களம் இல்லை. அஞ்சலி தனக்கு கொடுத்த ரோலில் கச்சிதமாக நடித்துள்ளார்.
யோகிபாபு செய்யும் காமெடி முதல் பாதியில் நம்மை சிரிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் அவரை காண முடியவில்லை. "கதை எழுதுறேன்னு கூட்டிட்டுவந்து ஏன்டா சாவடிக்குறீங்க" என பல இடங்களில் யோகிபாபுவே கூறுவார். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருத்தவர்களிடமும் அதே ரெஸ்பான்ஸ் தான். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருந்தது. ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார்.
மொத்தத்தில் பலூன் மேலே பறக்காமல் அதிக நேரம் தரைதட்டியே நிற்கிறது. இருப்பினும் திகிலை எதிர்பார்க்காமல் வெறும் காமெடிக்காக மட்டும் பலூனை ஒருமுறை பார்க்கலாம்.
பலூன் திரைவிமர்சனம்....
Reviewed by Author
on
January 21, 2018
Rating:
Reviewed by Author
on
January 21, 2018
Rating:



No comments:
Post a Comment