கடவுளை விட மைத்திரியை நம்பும் மழலை சிறுமி: நெஞ்சை உருக வைக்கும் வரிகள்!
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி பல்வேறு மட்டங்களிலும் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைகள் முன்வைத்து வரும் நிலையில், ஆனந்தசுதாகரனின் மகள், ஆ.சங்கீதா தனது அப்பாவை விடுவிக்க உங்களது அப்பாவுக்கு சொல்லுங்கள் என மைத்திரியின் மகள் சத்துரிக்காவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேருந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான காட்சியாக இருந்தது.
தாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்திற் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலே, ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
ஆனந்த சுதாகரன் சங்கீதா,
D.4 மருதநகர்,
கிளிநொச்சி.
22/03/2018.
அன்புடன் சத்துரிக்கா அக்காவுக்கு!
அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார்.
இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே.
அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.
அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.
அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய உதவுங்கள்.
நன்றி.என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
அன்புள்ள உங்கள் தங்கை
ஆ.சங்கீதா.
கடவுளை விட மைத்திரியை நம்பும் மழலை சிறுமி: நெஞ்சை உருக வைக்கும் வரிகள்!
Reviewed by Author
on
March 23, 2018
Rating:
Reviewed by Author
on
March 23, 2018
Rating:


No comments:
Post a Comment