விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி - மண்டைக்கல்லாறு ஆற்றுக்கான உவர்நீர்த் தடுப்பணையை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பூநகரி பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மண்டைக்கல்லாறு பாலத்திற்கான உவர் நீர்த்தடுப்பணை அமைக்கப்படாமையினால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாற்றில் உவர்நீர்பெருக்கெடுத்து முடக்கனாற்றினூடாக வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளுக்குள் உவர்நீர் உட்புகுந்து வருடாந்தம் இப்பகுதிகளில் உவர்ப்பரம்பல் அதிகரித்து வருகின்றது.
மண்டைக்கல்லாற்றுக்கான பாலம் 400 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், கடல்நீர் உட்புகுதலை தடுப்பதற்கும் ஆனைவிழுந்தான் வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வெளியேற்றுவதற்குமான கதவுகளுடன் கூடிய தடுப்பணைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
உவர் நீர்த்தடுப்பணைகள் இன்மையால் கடற்பெருக்கு காலங்களில் உவர் நீர் பெருக்கெடுத்து வன்னேரிக்குளம், குஞ்சுக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது அக்கராயன்குளம் பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக அக்கராயன்குளத்தின் கீழான ஸ்கந்தபுரம் மணியங்குளம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாறி வருகின்றன.
மேலும், விளைநிலங்கள் பலவும் உவர்நிலங்களாக மாறி வருகின்றதுடன், விளைச்சல்கள் பாதிப்படைவதாகவும் இந்த பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
Reviewed by Author
on
June 12, 2018
Rating:
Reviewed by Author
on
June 12, 2018
Rating:


No comments:
Post a Comment