மன்னாரில் மீட்கப்படும் மனித எச்சங்களின் பின்னணி-அகழ்வை நேரடியாக பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர்
மன்னாரில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் மனித எச்ச அகழ்வு பணியை நேற்று திங்கட்கிழமை (11.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆயர் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுடன் உரையாடியது தொடர்பாக இன்று (12) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் நடைபெறும் மனித எச்சங்கள் அகழ்வு பணியை மேற்கொள்ளும் இடத்துக்குச் சென்று சற்று தெரிந்து கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை அவ்விடத்துக்குச் சென்றிருந்தோம்.
மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் அரசு இவ் விடயத்தில் கவனம் செலுத்தி இதன் நிலையை கண்டு பிடிக்கும் நோக்குடன் இவ் வேலையை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு வரும் இவ் எலும்புக்கூடுகள் எந்த காலத்துக்குரியது என உடன் கண்டு பிடிக்க முடியாதுபோல் தெரிகின்றது.
இந்த இடத்தில் ஒரு பக்கத்தில் குப்பைத் தொட்டியும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அகழ்வில் இருந்து பிஸ்கட் பக்கெற் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதிலிருந்து ஓரளவு எந்த காலத்திலுள்ளது என்பதைக் கொண்டும் ஆய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அகழ்வு செய்யப்படும் ஒவ்வொரு இடத்தையும் பகுதி பகுதிகளாக பிரித்து எந்தெந்த இடத்தில் இருந்து எந்த எந்த தடையங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றது என்பதை பணியாளர்கள் அளவீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மனித உடம்பு விடயங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளவர்கள் மூலமே இப்பணி நடை பெறுவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அங்கு நடக்கும் அகழ்வை நோக்கும் போது கடல் மட்டத்துக்கு சற்று மேல் வரைக்கும் தோண்டப்பட்டுள்ளதையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. நான் அங்கு கவனித்தபோது மண்டையோடுகள் வெவ்வேறாக எனக்கு தென்படவில்லை.
பெரும்பாலும் ஒரே இடத்தில் காணப்பட்டதாகவே இருந்தது. மன்னாரில் 14 ம் நூற்றாண்டில் 'காலரா ' என்ற நோய் பரவிய காலத்தில் நடை பெற்ற சம்பவமா அல்லது அண்மை காலத்தில் நடைபெற்ற சம்பவமா எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கெல்லாம் உடற்கூற்று பரிசோதனை செய்வதன் மூலமே உண்மை நிலையை கண்டறிய முடியும். தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு வரும் மண்டையோடுகளில் சிறுவர்களுடையதும் காணப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் மீட்கப்படும் மனித எச்சங்களின் பின்னணி-அகழ்வை நேரடியாக பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர்
Reviewed by Author
on
June 12, 2018
Rating:
Reviewed by Author
on
June 12, 2018
Rating:



No comments:
Post a Comment